

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்திஎம்எல்ஏ.க்களை பாஜக ஆளும் கர்நாடகாவுக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள கோவிந்த் சிங் தோட்டாஸ்ரா கூறும்போது, ‘‘எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.க்களை தனி விமானத்தில் பாஜக ஆளும் கர்நாடகாவுக்கு கொண்டு செல்ல முயற்சிகள் நடந்து வருகிறது’’என்றார். இதற்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் பெங்களூரு வந்தால் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
பகுஜன் கட்சி எம்எல்ஏ.க்களை குதிரைபேரத்தின் மூலம் விலைக்கு வாங்கியது தெரிய வந்துள்ளது. ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.