

நாட்டில் கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை எடுத்துவருவோர் எண்ணிக்கையைவிட, நோயானால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தோர் எண்ணிக்கை 2.95 லட்சமாக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் ஒட்டுமொத்தமாக 10 லட்சத்து 38 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 34 ஆயிரத்து 884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனாவிலிருந்து மட்டும் நேற்று ஒரே நாளில் 17 ஆயிரத்து 944 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்து 750 ஆக உயர்ந்துள்ளது. மீண்டோர் சதவீதம் 63 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 58 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை எடுத்துவருவோரின் எண்ணிக்கைக்கும், குணமடைந்தோர் எண்ணிக்கைக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிகிச்சையில் இருப்பவர்களை விட, குணமடைந்தோர் எண்ணிக்கை 2.95 லட்சமாக அதிகரித்துள்ளது.
சிகிச்சையில் இருபவர்கள் பெரும்பாலும் மருத்துவனைகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ கவனிப்பு, சிகிச்சை, ஆலோசனைகள் தொடர்ந்து மாநில அரசு மருத்துவர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு கோடியே 34 லட்சத்து 33 ஆயிரத்து 742 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 24 மாதிரிகள் மட்டும் வெள்ளிக்கிழமை பரிசோதிக்கப்பட்டன. இதன் மூலம் 10 லட்சம்பேருக்கு 9 ஆயிரத்து734 பேர் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசுகளுக்கு தொடர்ந்து மத்திய அரசு தேவையான ஆதரவு, உதவிகளை வழங்கும். பிஹார், மேற்கு வங்கம், அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சமீபகாலமாக கரோனா தொற்றுக்கு புதிதாக ஆளாகுபவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இந்த மாநில அரசுகள் தீவிரமான தடுப்பு நடவடிக்களை மேற்கொண்டு பரவலைத் தடுக்க வேண்டும், உயிரிழப்பை ஒரு சதவீதத்துக்கும் குறைவாக வைக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை அமல்படுத்தினால், அதைப் பயன்படுத்தி, கரோனா தொற்றுக்கு ஆளாகியவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்களைக் கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பரிசோதனை அளவை அதிகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிஹார் மாநிலத்துக்கு உதவுவதற்காகவும் தேவையான ஆலோசனைகள் வழங்கவும் சுகாதாரத்துறைச் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தலைமையில், தேசிய நோய் தடுப்பு மையத்தின் இயக்குநர் மருத்துவர் எஸ்.கே. சிங், எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் பேராசிரியர் நீரஜ் நிச்சலஆகியோர் செல்கின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.