Published : 18 Jul 2020 08:48 AM
Last Updated : 18 Jul 2020 08:48 AM

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இல்லை: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் தாக்கு

சுவாசக் கருவி பொருத்தப்பட்டு அபாயக் கட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தா டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி உட்கட்சி பூசலில் சிக்கித் தவிக்கிறது. சுவாசக் கருவி பொருத்தப்பட்டு அபாயக் கட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி பிழைப்பதாகத் தெரியவில்லை. பிளாஸ்மா சிகிச்சை, ஹைட்ராக்ஸி குளோரிகுவின் மருந்து எதுவுமே காங்கிரஸை காப்பாற்றாது. அக்கட்சிக்கு எதிர்காலம் இல்லை. காங்கிரஸால் நாட்டின் எதிர்காலத்துக்கும் எதுவும் செய்ய முடியாது. புதிய ரத்தமும் நாட்டுக்கு துடிப்பான வழிகாட்டுதலைக் காட்டும் தலைமையும் தேவைப்படுகிறது. கரோனாவை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்த வேண்டிய இந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் அசிங்கமான அரசியலில் ஈடுபட்டு வருகின்றன.

ஒரு கட்சி தனது எம்எல்ஏ-க்களை விற்கிறது. மற்றொரு கட்சி எம்எல்ஏ-க்களை வாங்குகிறது. காங்கிரஸ், பாஜகவுக்கு வாக்களித்த மக்கள், நாட்டின் நிலைமையை எண்ணி கவலையுடன் உள்ளனர். அபாய கட்டத்தில் உள்ள காங்கிரசுக்கு ஆம் ஆத்மி கட்சிதான் மாற்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி தனது ட்விட்டர் பதிவில், ‘‘மக்கள் ஆம் ஆத்மிக்கும் கேஜ்ரிவாலுக்கும் வாக்களித்தனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் டெல்லியை ஆட்சி செய்கிறார். இதுபோன்ற ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டால் மற்றொரு கட்சி ஆளும் இரட்டை சலுகையை காங்கிரஸால் கொடுக்க முடியாது’’ என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x