

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நேற்று நடந்த மோதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் இந்த அமைப்பின் தளபதியாக செயல்பட்டவர். இவர் வெடிகுண்டு தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர் என்றும் பாதுகாப்புப் படையினருடன் அண்மையில் 3 முறை நடந்த மோதல் சம்பவங்களில் தப்பியவர் என்றும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் கட்டளைக்கேற்ப செயல்படும் இவர் , பாதுகாப்புப்படையினரை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த பலமுறை முயற்சி மேற்கொண்டவர் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குல்காம் மாவட்டம் நாக்நாத் பகுதியில் உள்ள சிம்மர் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து மத்திய ரிசர்வ் படை போலீஸார், ராணுவம் மற்றும் குல்காம் மாவட்ட போலீஸார் கூட்டாக சேர்ந்து அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சுட்டதால் இருதரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை தரப்பில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.