

கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்று அழைக்கப்படும் பாஜகவின் ஆட்சிக் கவிழ்ப்பு உத்தியில் அங்கு ஆட்சியை மீண்டும் பிடிக்க தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆபரேஷன் லோட்டஸ் வலை விரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ஷரத் பவாரின் தேசியவாதக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கும் ஆபரேஷன் லோட்டஸை நடத்துவதற்காகவே முன்னாள் மகாராஷ்ட்ர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்ததாக செய்திகள் எழுந்துள்ள நிலையில் பட்னாவிஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் அதனை மறுத்துள்ளார்.
“அமித் ஷாவைச் சந்தித்தது அரசியல் தொடர்பானதல்ல. மாநிலத்தில் பாதிக்கப்பட்ட சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த நிதியுதவி செய்ய வேண்டும் என்று அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்தேன்.
மகாராஷ்ட்ராவில் கூட்டணி ஆட்சியைக் கவிழக்க எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. ஏனெனில் மகாராஷ்ட்ரா கூட்டணி அரசு தானாகவே கவிழ்ந்து விடும்.
அது நாளைக்கே நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆட்சிக் கவிழும் வரை காத்திருப்போம்” என்றார் பட்னவிஸ்.