

ஐ.நா.வின் பொருளாதார மற்றும்சமூக கவுன்சிலின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி முறையில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் முதல் தலைவராக இந்தியர் ஒருவரே பதவி வகித்துள்ளார். அந்த வகையில், இந்த அமைப்பை மேம்படுத்தியதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக அரசு மட்டும்போராடினால் போதாது என்பதை இந்தியா ஆரம்பத்திலேயே உணர்ந்தது. எனவே, கரோனாவுக்கு எதிரான போரில் மக்கள்,அரசு இயந்திரம் என அனைத்தையும் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, இப்போது இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான போராட்டம், மக்கள் இயக்கமாகமாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, இங்கு இந்த தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி, கரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துப் பொருட்கள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை 150 நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருகிறது.
தன்னுடைய வளர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக இந்தியா இருந்தது கிடையாது. மாறாக, பல வளரும் நாடுகளின் முன்னேற்றத்துக்கும், அவற்றின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கும் என்றும் பக்கபலமாக இருந்து வருகிறது. “அனைவருக்குமான வளர்ச்சி; அனைவருக்குமான நம்பிக்கை” என்பதே இந்தியாவின் தாரக மந்திரம் ஆகும்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.