

புத்த புனித பயணங்களை ஊக்குவிக்கும் “எல்லை தாண்டிய சுற்றுலா” குறித்த இணையக் கருத்தரங்கில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பேசினார்.
புத்த சுற்றுலா நடத்துனர்கள் சங்கம் 2020ஜூலை15-ம் தேதி ஏற்பாடு செய்த ‘‘எல்லை தாண்டிய சுற்றுலா’’ என்ற தலைப்பிலான இணையக் கருத்தரங்கை மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த இணையக் கருத்தரங்கை தொடங்கி வைத்த பிரகலாத் சிங் படேல், இந்தியாவில் புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களைப் பட்டியலிட்டார். புத்தமத கொள்கையைப் பின்பற்றுபவர்கள், உலகம் முழுவதும் அதிகளவில் உள்ளதாகவும் மற்றும் புத்தரின் பூமியாக இந்தியா இருந்தும், புத்தமத பாரம்பரிய இடங்கள் அதிகளவில் இருந்தும், இங்கு புத்த யாத்தரிகள் குறைந்த அளவே வருதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கான காரணங்களை கண்டறிந்து, அதற்கேற்ப சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என படேல் வலியுறுத்தினார்.
நாட்டில் உள்ள முக்கிய புத்தமத தலங்களில், சீன மொழி உட்பட சர்வதேச மொழிகளில் விளக்கங்கள், வரைபடங்கள் இடம் பெற வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாரநாத், குஷிநகர் மற்றும் சரவஸ்தி உட்பட 5 புத்த தலங்களில் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். அதேபோல், சாஞ்சிக்கு அதிகளவில் இலங்கை சுற்றுலாப் பயணிகள் வருவதால், அங்குள்ள நினைவிடங்களில் சிங்கள மொழியில் விளக்கங்கள் இருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதையும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாக இருக்கும்.
நாட்டில் உள்ள புத்தமத தலங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் பல நடவடிக்கைகள் எடுத்துவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புத்த சுற்றுலாவை மேம்படுத்துவதில், புத்த சுற்றுலா நடத்துனர்கள் சங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்த சங்கத்தில்.1,500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த இணையக் கருத்தரங்கில், ஐ.நா அமைதிப்படை கவுன்சில் பிரதிநிதிகள், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், கம்போடியா, இந்தோனேஷியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.