Published : 17 Jul 2020 12:32 PM
Last Updated : 17 Jul 2020 12:32 PM

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ  கல்வி வாரியங்களை இணைக்கக் கோரி பொதுநல மனு: உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

ஒருநாடு, ஒரு கல்வி வாரியம் அமைக்கக்கோரி பாஜகவின் 'அஸ்வினிகுமார் உபத்யாய்' தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிபிஎஸ்இ - ஐசிஎஸ்இ கல்வி வாரியங்களை ஒன்றாக இணைக்கவேண்டும் என பொதுநல வழக்கு ஒன்றை பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அஸ்வினிகுமார் உபத்யாய் தாக்கல் செய்த மனுவில்,

“மாணவர்களின் நலனுக்காக 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, நாடு முழுவதும் ஒரே பாட திட்டம் மற்றும் ஒரே கல்விமுறை கொண்டு வரும் வகையில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ கல்வி வாரியங்களை இணைக்க வேண்டும்”. எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இது அரசின் கொள்கை சார்ந்த விசயங்கள், எனவே இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தனர். அதேபோல இரு கல்வி வாரியங்களை இணைக்க நீதிமன்றத்திடம் எப்படி நீங்கள் கோர முடியும் ? இது நீதிமன்றத்தின் பணி கிடையாது என நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தொரிவித்தார்

மேலும் ஏற்கனவே நமது பள்ளி மாணவர்கள் அதிகபடியான புத்தக சுமையை தோளில் சுமக்கின்றனர், அப்படி இருக்கையில் ஏன் கூடுதலாக புத்தக சுமையை அவர்கள் தோளில் வைக்கிறீர்கள். வேண்டுமெனில் இது தொடர்பாக அரசிடமும், உரிய அமைப்பிடம் மனு அளிக்கலாம், எனத் தெரிவித்து வழக்கை விசாரிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதனையடுத்து மனுதாரர் அஸ்வினிகுமார் உபத்யாய், இந்த விவகாரம் தொடர்பான கோரிக்கையை மத்திய அரசிடம் கொடுக்க உள்ளதாகவும், மேலும் தேவைப்படும் பட்சத்தில் இந்த கோரிக்கையை அரசியல் சாசன பிரிவு 226-ன் கீழ் மனுவாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x