

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
அதுமட்டுமல்லாமல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
இந்நிலையில் ராமர் ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை அடுத்த மாதம் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது. இது குறித்து இறுதி முடிவு எடுக்கவும், திட்டமிடவும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சனிக்கிழமை(நாளை) கூடி முடிவு எடுக்கிறது.
இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்ய கோபால் தாஸின் செய்தித்தொடர்பாளர் மகந்த் கமல் நயன் தாஸ் நிருபர்களிடம் கூறுகையில் “ராமர் கோயில் கட்டுமானப் பணியின் பூமி பூஜைக்கான பணி தொடங்கும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை அழைக்க திட்டமிட்டு, அதற்கான அழைப்பு கடிதத்தை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நித்யா கோபால் தாஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்பது குறித்து இப்போது ஏதும் தெரிவிக்க இயலாது. 18-ம் தேதி (நாளை) நடக்கும் கூட்டத்துக்குப்பின் பிரதமர் மோடி பங்கேற்பது உறுதியாகும். இந்த பூமி பூஜையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே ராமர் கோயில் அறக்கட்டளையின் கட்டுமானக் குழுவின் தலைவரும், பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மைச் செயலாளருமான நிர்பேந்திர மிஸ்ரா, ராம் ஜென்பபூமியின் அறக்கட்டளையின் பாதுகாப்பு ஆலோசகர் பிஎஸ்எப் முன்னாள் இயக்குநர் கே.கே.சர்மா உள்ளிட்ட பலர் நேற்று அயோத்திக்கு வந்திருந்தனர்.
அயோத்தியில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்று நடந்த கூட்டத்தில் நிர்பேந்திர மிஸ்ரா, கே.கே.சர்மா ஆகியோர் உள்ளூர் நிர்வாகிகளுடனும், அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய், உறுப்பினர்கள் அனில் மிஸ்ரா, பிம்லேந்திரா மிஸ்ரா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.
அயோத்தி பாஜக எம்எல்ஏ பிரகாஷ் குப்தா கூறுகையில் “ ராமர் கோயில் கட்டும் பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை அழைத்துவர தீவிரமாக முயன்று வருகிறோம். அயோத்திக்கு பிரதமர் மோடி மட்டும் வந்துவிட்டால், இந்த இடம் மாறிவிடும், அயோத்தி என்பது வாடிகன் நகரம் போல் மாறும் என்ற எங்கள் கனவு நிறைவேறும்” எனத் தெரிவித்தார்.