

அசாம் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள கோவிட்-19 சிகிச்சை மையத்திலிருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான கரோனா நோயாளிகள் தேசிய நெடுஞ்சாலையில் உணவு, தண்ணீர் கேட்டு போராட்டம் நடத்தினர்.
காம்ரூப் உதவி ஆணையர் கைலாஷ் கார்த்திக் மற்றும் போலீசார் சங்சாரியில் உள்ள கரோனா சிகிச்சை மையத்துக்கு விரைந்து வந்து நோயாளிகள் மையத்துக்குத் திரும்புமாறும் நெடுஞ்சாலையிலிருந்து கிளம்புமாறும் அறிவுறுத்தினர். மேலும் நாம் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திக் கொள்வோம் இப்போது கலைந்து செல்லுங்கள் என்று நோயாளிகளிடம் கூறினர்.
உறுதியை ஏற்று நோயாளிகள் மையத்துக்குத் திரும்பியதையடுத்து பரபரப்பு அடங்கியது.
தங்களுக்கு உணவு, தண்ணீர் அளிப்பதில்லை. படுக்கை கிழிந்து போய் உள்ளது. ஒரே அறையில் 10-12 பேரை வைத்திருக்கின்றனர் என்று நோயாளிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.
வசதிகள் மீது அதிருப்தி என்றால் வீட்டுக்குத் திரும்புங்கள்: அமைச்சர்
அசாம் மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறும்போது, “நோயாளிகள் வசதிகள் குறித்து அதிருப்தி அடைந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
நாங்கள் ஏன் அவர்களை இங்குக் கொண்டு வருகிறோம் என்றால் மற்றவர்களை தொற்றிலிருந்து தடுக்கத்தான். இங்கு இவர்களுக்குப் பிடிக்கவில்லை எனில் வீட்டுக்குச் சென்று தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
சுகாதாரப் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர், இதனால் களைப்பினால் சில வேளைகளில் தாமதம் ஏற்படும்.
மற்ற மாநிலங்களில் கரோனா டெஸ்ட்டிங் கூட கட்டணத்துக்குத்தான் செய்யப்படுகிறது. ஆனால் அஸாமில் டெஸ்ட்டிங் முதல் உணவு, தங்குமிடம் அனைத்தும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது” என்றார் சர்மா.