ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் இந்தியாவில் கரோனா எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துவிடும்: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரி்க்கை

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
2 min read

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று இதே வேகத்தில் சென்றால், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் 20 லட்சத்தைக் கடந்துவிடும். கரோனா பரவலைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இன்று 10 லட்சத்தைக் கடந்துள்ளது, உயிரிழப்பு 25 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 36 லட்சத்தைக் கடந்து சென்றுள்ளது, பிரேசிலில் 20 லட்சத்தைக் கடந்துள்ளது.

தற்போது இந்தியாவில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை எடுத்துவருபவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 31 ஆயிரத்து 146 ஆக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா வைரஸ் நாட்டில் பரவத் தொடங்கியதிலிருந்தே மத்திய அரசு உறுதியான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

லாக்டவுனை முறையாகப் பயன்படுத்தாமல் விட்டதால், தற்போது கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, லாக்டவுனால் மக்களின் பொருளாதார நிலையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும்தான் சரிந்துள்ளன என்று வரைபடம் மூலம் கடந்த ட்விட்டகளில் மத்திய அரசைச் சாடியிருந்தார்.

பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் லாக்டவுனை கையாண்ட விதத்துக்கும் இந்தியா கையாண்ட விதத்துக்கும் இடையிலான வேறுபாடுகளையும் வரைபடங்கள் மூலம் ராகுல் காந்தி சுட்டிக்காடி விமர்சித்திருந்தார்.

லாக்டவுனில் வேலையிழந்து, வறுமையில் வாடும் மக்களுக்கும்,புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.7000 உதவித்தொகை வழங்கிட வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தி வந்தார்.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு இந்த வாரத்தில் 10 லட்சத்தை எட்டும என்று கடந்த செவ்வாய்கிழமை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்திருந்தார். அதன்படி நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு இன்று 10 லட்சத்தைக் கடந்துள்ளதால், மத்திய அரசை விமர்சித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் “ இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இதே வேகத்தில் கரோனா தொற்று பரவி வந்தால், ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் 20 லட்சம் பேர் நாட்டில் நோய் தொற்றுக்கு ஆளாவார்கள். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு உறுதியான, திட்டமிட்ட நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், செவ்வாய்கிழமை ராகுல் காந்தி தான் ட்வீட் செய்திருந்த இந்தி ட்விட்டர் போஸ்டையும் இன்றைய பதிவில் இணைத்து வெளியிட்டுள்ளார். அதில் இந்த வாரத்தில் இந்தியா கரோனா தொற்றில் 10 லட்சத்தைக் கடந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in