Published : 17 Jul 2020 08:01 AM
Last Updated : 17 Jul 2020 08:01 AM

இந்தியத் தூதரக அதிகாரிகள் குல்பூஷண் ஜாதவுடன் சந்திப்பு

உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவை இந்தியத் தூதரக அதிகாரிகள் நேற்று சந்தித்து பேசினர்.

பாகிஸ்தானை உளவுப் பார்த்ததாக கூறி, முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஈரானில் குல்பூஷண் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். வர்த்தக விஷயமாக பாகிஸ்தான் சென்ற போதுதான், அவர் உளவு பார்த்ததாகவும், அந்நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு 2017-ம்ஆண்டு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேலும், அவருக்கு தூதரக உதவி கிடைப்பதற்கும் அனுமதி மறுத்தது.

இதற்கு எதிராக இந்தியா சார்பில் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், குல்பூஷண் ஜாதவின் மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்த நீதிமன்றம், அவருக்கு தூதரக உதவி வழங்கவும் உத்தரவிட்டது. இதன்பேரில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரை இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசினர்.

இந்த சூழலில், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு செவிசாய்க்காமல் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி, தமது மரண தண்டனைக்கு எதிராக மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்ய குல்பூஷண் மறுப்பதாகவும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் கடந்த வாரம் கூறியது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்ய விடாமல் குல்பூஷணை பாகிஸ்தான் தடுப்பதாக குற்றம் சாட்டி வருகிறது. மேலும், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுபடி அவருக்கு தூதரக உதவி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.

இதன்பேரில், பாகிஸ்தான் அரசு அவருக்கு நேற்று இரண்டாவது முறையாக தூதரக உதவியை பெற அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக மூத்த அதிகாரிகள், குல்பூஷண் ஜாதவை நேற்று சந்தித்து பேசினர். 2 மணிநேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

குல்பூஷண் ஜாதவ் தனது மரண தண்டனையை எதிர்த்து மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 20-ம் தேதியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x