Last Updated : 16 Jul, 2020 01:53 PM

 

Published : 16 Jul 2020 01:53 PM
Last Updated : 16 Jul 2020 01:53 PM

12 சதவீதம் இல்லை; சானிடைசருக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி: மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

கைகளைச் சுத்தம் செய்யும் சானிடைசர் உள்ளிட்ட கிருமிநாசினி பொருட்கள் அனைத்தும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி வீதத்துக்குள் வரும். 12 சதவீத ஜிஎஸ்டி வரிக்குள் வராது என்று மத்திய நிதியமைச்கம் விளக்கம் அளித்துள்ளது.

ஸ்பிரிங்பீல்ட் (இந்தியா) டிஸ்டில்சர்ஸ் நிறுவனம் கோவா மாநிலத்தின் ஜிஎஸ்டி வழக்குகளை விசாரிக்கும் ஏஏஆர் ஆணையத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

அதில், சானிடைசரை மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் வைத்துள்ளதால் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறதா அல்லது மருத்துவப் பொருட்கள் என்பதால் அதற்கு 12 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டிருந்தது.

இதை விசாரித்த கோவா ஏஏஆர் ஆணையம் அளித்த உத்தரவில், “அத்தியாவசியப் பொருட்கள் என்ற பட்டியலில் சானிடைசர் இருந்தாலும் அதற்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க முடியாது. ஆல்கஹால் கலந்த ஹெச்எஸ்என் பிரிவில் வருவதால் அதற்கு 12 சதவீதம் அல்ல, 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வரும்.

பெரும்பாலான உற்பத்தியாளர்கள் ஆல்கஹால் கலந்த சானிடைசரை ஜிஎஸ்டி எண் 3004 பிரிவில் 12 சதவீத வரியின் கீழ் வருகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால், ஹெஎஸ்என் 3008 பிரிவின்படி 18 சதவீத வரிக்கு உட்பட்டதாகும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நேற்று வெளியிட்ட விளக்க அறிக்கையில், “சானிடைசர் தயாரிக்கப் பயன்படும் பல்வேறு வேதி உள்ளீடு பொருட்கள், சோப்பு, கிருமிநாசினி திரவங்கள், சோப்பு, டெட்டால் உள்பட அனைத்தும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் வரும்.

கிரிமிநாசினி, சானிடைசர் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைத்தால், அது பாதகமான விளைவுகளை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுத்திவிடும். இதனால் இறக்குமதி அதிகரித்து, உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இது தேசத்தின் தற்சார்பு பொருளதாாரக் கொள்கைக்கு விரோதமாக அமைந்துவிடும். ஜிஎஸ்டி வரியைக் குறைத்தாலும், தலைகீழ் வரிவிதிப்பின் கீழ் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும் பயன்கிடைக்காத பட்சத்தில் நுகர்வோர்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்காது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x