

மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் அரசுஊழியர் ஒருவர் உயிரிழந்தால், அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸ் தொற்றால் நேற்றைய நிலவரப்படி 32 ஆயிரத்து 838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 980 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் காலத்தில் அச்சமின்றி அரசுப்பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கரோனாவால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மாநிலத்தில் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இதுவரை 12 அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இனிமேலும், அரசு ஊழியர்கள் கரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். குடும்பத்தில் உள்ள ஒருவரின் கல்வித் தகுதி அடிப்படையில் அந்த வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் உயிரிழந்த அரசு ஊழியர் அதாவது மருத்துவர், காவலர், மருத்துவப்பணியாள ஆகியோரைக் கவுரவப்படுத்தும் வகையில் அவரின் குடும்பத்தாருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும். அரசு சார்பில் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாகவும் வழங்கப்படும்.
தனியார் மருத்துவர்களும் கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உயிரிழக்க நேர்ந்தால், அவர்களுக்கும் பதக்கம், சான்றிதழ், இழப்பீடு ஆகியவை வழங்கப்படும்.
சமானிய மக்களை அச்சுறுத்தம் வகையில் இல்லாமல், கரோனா வைரஸ் குறித்த நேர்மறையான செய்திகளையும், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது போன்ற செய்திகளை வெளியிட்டு நம்பிக்கையூட்ட வேண்டும் என ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். கரோனா அதிகமான பாதிப்பு ஏற்படுத்தும் இடங்களில் பரிசோதனையை அதிகப்படுத்தி இருக்கிறோம். கரோனா பாஸிட்டிவ் நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்தும் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளோம். இதனால்தான் கரோனா நோயாளிகள் அதிகமாக இருப்பதாக வெளிப்படுகிறது
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்