

வடமாநிலங்களில் சுமார் 3 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வெட்டுக் கிளிகள் அழிக்கப்பட்டன.
ஆண்டுதோறும் ஜூன் முதல்அக்டோபர் வரை காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக பறந்து வந்து பயிர்களை நாசப்படுத்துகின்றன. இவை ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன், ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியவில் நுழைகின்றன.
இவற்றை கட்டுப்படுத்த மத்தியவேளாண் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி கடந்த 11, 12, 13ஆகிய தேதிகளில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹரியாணா, பிஹார் மாநிலங்களில் சுமார் 3 லட்சம் ஹெக்டேரில் வெட்டுக்கிளிகளை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னதாக இந்திய விமானப் படையின் எம்-17 ஹெலிகாப்டர் மூலம் வெட்டுக்கிளிகள் கூட்டம் அடையாளம் காணப்பட்டது. பின்னர் சுமார் 60-க்கும் மேற்பட்ட குழுக்கள், வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளித்து வெட்டுக் கிளிகளை அழித்தன. 15-க்கும் மேற்பட்ட ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மத்திய வேளாண் துறையை சேர்ந்த 200 அலுவலர்கள் பணிகளை மேற்பார்வையிட்டனர்.