ராமர் கோயில் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த கோரி புத்த துறவிகள் ஆர்ப்பாட்டம்
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு புத்த துறவிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, அவர்கள் நேற்று அயோத்தியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ராமர் கோயில் கட்டப்படவுள்ள இடம், புத்த மதத்தைச் சேர்ந்த இடம் என்றும், கோயில் கட்டுமானப் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து ஆசாத் புத்த தர்ம சேனா அமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:
ராமர் கோயில் கட்டுமானப் பணிகள், தொடங்கிய போது பூமியை தோண்டினர். அப்போது சிவலிங்கம், பல்வேறு கடவுளர்களின் பழங்கால சிலைகள், உடைந்த விக்ரகங்கள், சிற்பங்கள். செதுக்கப்பட்ட துாண்கள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் புத்த மதத்துடன் தொடர்புடையவை. எனவே கோயில் கட்டும் பணியை நிறுத்தவேண்டும். உலக பாரம்பரிய சின்னங்களைக் காக்கும் யுனெஸ்கோ அமைப்பு சார்பில் அங்கு மீண்டும் அகழ்வாராய்ச்சிப் பணிகளை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மைகள் வெளிவரும். அயோத்தி நகரமானது, புத்த மதத்தின் மையமாக விளங்கிய நகரமாகும். இதுதொடர்பான புகாரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இதர அரசு அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.- பிடிஐ
