Last Updated : 16 Jul, 2020 08:23 AM

 

Published : 16 Jul 2020 08:23 AM
Last Updated : 16 Jul 2020 08:23 AM

பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு வர எத்தனை கோடி கொடுத்தீர்கள் என சொல்வீர்களா? அசோக் கெலாட்டுக்கு சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏ பதிலடி

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க எத்தனை கோடி கொடுத்தீர்கள் என்பதைச் சொல்ல முடியுமா என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான ரமேஷ் மீனா கேள்வி எழுப்பியுள்ளார்.

சச்சின் பைலட் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ரமேஷ் மீனா பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்து கொண்டனர். அப்போது அவர்களுக்குக் கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.

இந்த சூழலில் சமீபத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தனது ஆட்சியை கவிழ்ப்பதற்காக சச்சின் பைலட் அவரின் ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேர்ந்து பாஜக ஆதரவில் செயல்படுகிறார், குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் என்று குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சச்சின் பைலட், 2 அமைச்சர்கள் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. ஆனால், கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், மாநில தலைவர் பதவியும்பறிக்கப்பட்டது. 2 அமைச்சர்களின் பதவியும் பறிக்கப்பட்டது.

ரமேஷ் மீனா வீடியோவில் பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட்டின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் ரமேஷ் மீனா வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேர்மையுடன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். நான் முதலில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தேன், என்னுடன் சேர்த்து 3 எம்எல்ஏக்கள் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் நாங்கள் சேர்வதற்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எங்களுக்கு எத்தனை கோடி கொடுத்தீர்கள் என்பதைக் கூற முடியுமா. எத்தனை கோடி ரூபாய் அந்த குதிரைப் பேரத்தில் நடந்திருந்தது என்பதை அவர் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்.

காங்கிரஸில் சேர்ந்தபின் நாங்கள் ஏமாற்றப்பட்டோம், எங்கள் பணி மதிக்கப்படும் என்று வாக்குறுதியளித்தீர்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. ஆனால், காங்கிரஸில் சேர்ந்தபின் நேர்மையுடன் செயல்பட்டோம். எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் எங்கள் பணியில் சிறப்பாகவே செய்தோம்.

ஆனால், காங்கிரஸில் சேர்ந்தபின் நாங்கள் வைத்த எந்தக் கோரிக்கையையும் முதல்வர் காது கொடுத்து கேட்கவில்லை, ஒரு சர்வாதிகாரி போல் செயல்பட்டார்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு அதிருப்தி எம்எல்ஏ முராரி லால் மீனா வீடியோவில் கூறுகையில் “ இன்று, எங்கள் மீது ஊழல் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது, எங்களுக்கு இது வேதனையளிக்கிறது. நான் கெலாட்டிடம் ஒன்று கேட்கிறேன், கடந்த ஆட்சியில் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் மாறுவதற்கு எத்தனை கோடி பெற்றுக்கொண்டோம், நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்பதைச் சொல்ல முடியுமா. உங்களுக்கு தேவைப்பட்ட அந்த நேரத்தில் நாங்கள் நேர்மையானவர்களாக இருந்தோம், இன்றுநாங்கள் எப்படி ஊழல் நிறைந்தவர்களாக மாறினோம் என்று கூறுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x