‘ஹர் ஹர் மகாதேவ்...’துளசிச்செடி விநியோகம்- தொடங்கி விட்டது மத்தியப் பிரதேச இடைத்தேர்தல் சூடு

‘ஹர் ஹர் மகாதேவ்...’துளசிச்செடி விநியோகம்- தொடங்கி விட்டது மத்தியப் பிரதேச இடைத்தேர்தல் சூடு
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா தன் ஆதரவாளர்கள் 22 பேருடன் வெளியேற காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது சிவராஜ் சிங் சவுகானின் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காலியான 22 தொகுதிகள் உட்பட 25 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் தேர்தல் ‘வேலை’களைத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக இடைத்தேர்தல் நடைபெறும் இந்தூர் மாவட்ட சன்வர் தொகுதியை இரு கட்சியும் வட்டமடித்து வருகின்றன. காரணம் இது தனித்தொகுதி, இங்கு இரு கட்சிகளுமே இந்து ஆதரவு கோஷங்களையும் பிரச்சாரங்களையும் உரைத்து வருகின்றன.

பாஜக வழக்கம் போல் மோடியின் பெயரில் வாக்குவங்கி சேகரிப்புடன் வீடு வீடாகச் சென்று துளசிச் செடி வழங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சி தன் கோஷத்தில் ஹர் ஹர் மகாதேவ் என்பதைச் சேர்த்துக் கொண்டுள்ளது.

இந்தத் தொகுதியில் கடந்த முறை வேட்பாளரான சிந்தியாவின் விசுவாசி துளசிராம் சிலாவத் இம்முறை தாமரைச் சின்னத்தில் பாஜகவுக்காக நிற்கிறார்.

இவர் தன் பெயரிலேயே துளசிராம் இருப்பதால் மக்கள் தன் பெயரை மறந்து விடாமல் இருக்க வீடு வீடாக துளசிச் செடி விநியோகித்து வருகிறார். இதுவரை 10,000 துளசிச் செடிகள் விநியோகித்துள்ளாராம்.

காங்கிரஸ் கட்சியும் இந்து வாக்கு வங்கியை விடுவதாக இல்லை. ஹரித்துவாரிலிருந்து சிறிய சிவலிங்கம் வரவழைத்து 40,000 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப் போகிறார்களாம்.

இவ்வாறு ம.பி.இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in