Published : 16 Jul 2020 07:46 AM
Last Updated : 16 Jul 2020 07:46 AM

தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஏடிபி வங்கி துணைத் தலைவராக நியமனம்

இந்தியத் தேர்தல் ஆணையராக உள்ள அசோக் லவாசா ஆசிய மேம்பாட்டு வங்கி (ஏடிபி) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அசோக் லவாசா ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் ஜனவரி 2018-ல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் சுனில் அரோராவின் பதவிக் காலம் முடியும் போது அடுத்ததலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் வாய்ப்புடன் லவாசா இருந்தார். ஆனால், தற்போது ஆசிய மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவர்
பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், தன்னுடைய பதவிக் காலம் முடியும் முன்னரே தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து விலக உள்ளார்.

இப்படி வெளியேறும் 2-வது தேர்தல் ஆணையர் இவர். இதற்கு முன் 1973-ல் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த நாகேந்திர சிங், ஹாஹ்வேவில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து பதவிக் காலம் முடியும் முன்பே விலகினார்.
கடந்த 2019 தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி, பாஜக.வின் தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் நன்னடத்தை
விதிமுறைகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்த விவகாரத்தில் முரண்பட்டவர் அசோக் லவாசா என்பது குறிப்பிடத்தக்கது.

அதில், தேர்தல் ஆணையத்தின் நன்னடத்தை விதிகளை மீறும் வழக்குகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் எந்தவித பாரபட்சமுமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றார். இந்த விவகாரத்தில் அவருடைய கருத்தை 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையக் குழு ஏற்காததால் குழு விவாதத்தில் இருந்துஅவர் வெளியேறினார். இதனால்நாடு முழுவதும் அறியப்பட்டார். இதையடுத்து லவாசாவின் மனைவி நாவல் சிங்கால் லவாசா மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது. இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன் பல அமைச்சகங்களின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். முக்கியமாக நிதித் துறை செயலராக இவரது பணி குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆசியமேம்பாட்டு வங்கியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்பில் தற்போது உள்ள திவாகர் குப்தாவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 31 வரை உள்ளது. அதன்பிறகு இவர் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று வங்கி அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x