எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் 15 மணி நேரம் பேச்சுவார்த்தை

லடாக் எல்லையில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்திய பிறகு, அங்கு இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இமாச்சல பிரதேச மாநிலம் குளு பகுதியில் இருந்து லடாக்கின் லே பகுதிக்கு ராணுவ வாகனங்களில் வீரர்கள் விரைந்து செல்கின்றனர். படம்: பிடிஐ
லடாக் எல்லையில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்திய பிறகு, அங்கு இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இமாச்சல பிரதேச மாநிலம் குளு பகுதியில் இருந்து லடாக்கின் லே பகுதிக்கு ராணுவ வாகனங்களில் வீரர்கள் விரைந்து செல்கின்றனர். படம்: பிடிஐ
Updated on
1 min read

எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை 15 மணி நேரத்துக்கு நீடித்தது.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் சோ ஏரி, டெம்சோக், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மே மாதம் சீன ராணுவம் ஊடுருவியது. அதன்பின் நடந்த பேச்சு வார்த்தையில் படைகளை வாபஸ் பெற சீன - இந்திய ராணுவம் ஒப்புக்கொண்டன.

ஆனால் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ம்தேதி இரவில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் பலி எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அங்கும் 35 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதைத் தொடர்ந்து எல்லை யில் பதற்றம் ஏற்பட்டது. இதை தணிக்க இரு நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் படைகளை விலக்கிக் கொள்ள இருதரப்பும் ஒப்புக்கொண்டன. அதன்படி பாங்கோங், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து 2 கி.மீ. தூரத்துக்கு சீன ராணுவம் பின்வாங்கியது.

இந்நிலையில் மீண்டும் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் நிலையிலான 4-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்திய ராணுவ தரப்பில் கமாண்டர் ஹரீந்தர் சிங் கலந்து கொண்டார். சூசல் எல்லைப் பகுதியில் இந்த பேச்சுவார்த்தை காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 2 மணி வரை மொத்தம் 15 மணி நேரம் நீடித்தது. அப்போது சீனப் படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிக்கலான ஃபிங்கர் பகுதி

மேலும் கல்வான், பாங்கோங்சோ பகுதியில் முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது. 8 மலைச் சிகரங்கள் கொண்ட ஃபிங்கர் பகுதியில் படைகளைக் குறைப்பது தற்போது இந்தியா - சீனா இடையே மிகவும் சிக்கலான பிரச்சினையாக மாறியுள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் கடந்த முறை நடந்த பேச்சுவார்த்தையின் போது கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது குறித்தும் ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஆயுதங்கள், படைகளை படிப்படியாக எல்லையில் இருந்து விலக்குவது தொடர்பாகவும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சீனாவின் தரப்பில் மேஜர் ஜெனரல் லியு லின் கலந்து கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in