

பாஜக குதிரைப்பேரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடத்தில் உள்ளன என்று கூறிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், போர்க்கொடி உயர்த்திய சச்சின் பைலட்டை பாஜக சொற்படி நடப்பதாகக் குற்றம்சாட்டினார்.
“எங்களிடம் குதிரைப்பேரம் நடந்ததற்கான ஆதாரம் உள்ளது. பணம் கொடுக்க முயற்சி நடந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிப்பவர்கள் யார்? சதியில் ஈடுபட்டவர்களே விளக்கம் அளிக்கிறார்கள். எப்படி நம்ப முடியும்?
ராஜ்யசபா தேர்தலின் போது குதிரைப்பேரம் நடத்தியதற்கான பாஜகவுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன. அதனால்தான் எம்.எல்.ஏ.க்கள் 10 நாட்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
இதனை நாங்கள் அப்போது செய்யவில்லை எனில் இப்போது மனேசரில் நடந்தது அப்போதும் நடந்திருக்கும். சச்சின் பைலட் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்கப் பார்த்தார்.
நல்ல ஆங்கிலம், பார்க்க அழகாக இருப்பது, அருமையாகப் பேசுவது என்பது மட்டுமே அரசியலுக்குப் போதாது. நாட்டுக்காக உன் இதயத்தில் என்ன உள்ளது என்பதுதான் முக்கியம், அகத்தினழகு என்ன? உங்கள் கொள்கை, கருத்தியல், அர்ப்பணிப்புதான் அரசியலில் பேசும். இதை வைத்தே மற்ற விஷயங்களும் பார்க்கப்படும்” என்றார் அசோக் கெலாட்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா கூறும்போது, “சச்சின் பைலட் தான் பாஜகவில் சேர மாட்டேன் என்று கூறியப் பேட்டியைப் பார்த்தோம், அப்படியில்லை என்றால் பாஜக ஆளும் ஹரியாணா அரசின் பாதுகாப்பிலிருந்து அவர் வெளியே வர வேண்டும். பாஜகவுடன் அனைத்து உரையாடல்களையும் நிறுத்த வேண்டும். ஜெய்பூருக்கு திரும்ப வேண்டும்” என்றார்.