Published : 03 Sep 2015 05:08 PM
Last Updated : 03 Sep 2015 05:08 PM

அப்பாவி மக்கள் மீதான வன்முறை: மோடி ஆவேச கருத்து

புதுடெல்லியில் நடைபெற்ற "போராட்டத் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுக்கான இந்து-பவுத்த முனைப்பு" என்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, நாட்டு நலன் கருதாத சகிப்புத்தன்மையற்றவர்கள் அப்பாவி மக்கள் மீது காட்டுமிராண்டித் தனமான வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர் என்று கூறினார்.

மேலும் மோதல்களுக்கு தீர்வு பேச்சுவார்த்தைதான் என்று கூறினார் பிரதமர் மோடி.

போராட்டத் தவிர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுக்கான இந்து-பவுத்த முனைப்பு என்ற மாநாட்டில் மோடி பேசியதாவது:

சகிப்புத்தன்மையற்ற அரசு சாரா அமைப்பினர் உலக அளவில் பெரும் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அப்பாவி பொதுமக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

மோதல்களை தீர்ப்பதற்காக நாம் கையாளும் வழிமுறைகளுக்கு வரம்பு உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

பேச்சுவார்த்தைக்கான கதவைஅடைக்கும் சித்தாத்தங்கள் வன்முறைக்கு வழிசெய்கின்றன.

இந்து மதமும் பவுத்த மதமும் தத்துவங்களாகும். அவை நம்பிக்கை சார்ந்தவை மட்டும் அல்ல. அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.

உலமாகனது சித்தாத்தப் பாதையை விட்டுவிலகி சண்டை சச்சரவுகளுக்கு தீர்வு காண தத்துவத்தின் பக்கம் திரும்பவேண்டும். பேச்சுவார்த்தைக்கான கதவை அடைத்து வன்முறைக்கு சித்தாத்தங்கள் வழி செய்வதால் அந்த வன்முறையை பேச்சுவா்த்தை மூலம் தீர்த்திட தத்துவம் உதவும், என்றார்.

பிரதமர் மோடியின் முழு உரை:

இந்து - புத்த மதங்கள் இணைந்து மோதல் தவிர்ப்பு சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்வாத் என்ற இந்த மாநாட்டைத் துவக்குவதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

புத்தமதத்தைப் பின்பற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு கூடியுள்ள புத்த மதம் சார்ந்த ஆன்மிக தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள தலைவர்கள் கூடியுள்ள மதிப்பு மிகுந்த கூட்டம் இது.

புத்த கயா உட்பட இந்தியாவில் இந்த மாநாடு நடைபெறுவது பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது போன்ற மாநாட்டை இந்தியாவில் நடத்துவது தான் மிகவும் உகந்ததாகும். இந்தியாவில் தான் கவுதம புத்தர் புத்த மதக் கொள்கைகளை உலகிற்கு வழங்கினார் என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

பிறருக்கு சேவை செய்வதில் உள்ள சக்தி, கருணை மற்றும் அனைத்தையும் துறத்தல் ஆகியவையே புத்தர் நமக்கு அளித்த கொள்கைகள் ஆகும். அவர் பெருமைமிகு குடும்பத்தில் பிறந்தவர். இன்னல்களை அதிகம் அறிந்தவர் அல்ல ஆயினும் அவருக்கு வயது அதிகமாகும் போது மனிதர்கள் படும் துன்பம், நோய்கள், மரணம் ஆகியவை பற்றி விழிப்புணர்வை பெற்றார்.

உலகில் செல்வம் மட்டும் இன்பத்தை அளிக்காது என்று அவர் கூறினார். மனிதர்களிடையே உள்ள முரண்பாடு அவரை தாக்கியது. அமைதியான மற்றும் கருணை மிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும் அதன் வழியை காண வேண்டும் என்றும் அவர் துறவறம் கொண்டார். சமுதாயத்தில் காணப்பட்ட பல்வேறு வகை ஆன்மிக வழிமுறைகள் மிகவும் கடுமையானவை என்று கூறினார்.

கவுதம புத்தர் ஒரு புரட்சியாளர். மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. மனிதனின் ஆழ்ந்த மனம் கடவுள் போன்றது என்று அவர் கூறினார். கடவுள் இன்றி நம்பிக்கையை மட்டும் அவர் உருவாக்கினார். கடவுளை உள் மனதிலேயே காணலாம் என்றும் கூறினார். உங்களுக்குள்ளேயே ஒளி உள்ளது என்று குறிப்பிட்டார். நம்மை நாமே எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி கவுதம புத்தர் மனிதர்களுக்கு கூறினார். மனிதர்களிடையே ஏற்படும் மோதல்கள் அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் தான் மனிதர்கள் துன்பம் அடைகிறார்கள் என்றார். உலகம் முழுவதும் அகிம்சையை கடைப்பிடிப்பது மிக அவசியம் என்றும் கூறினார்.

மோதலைத் தவிர்ப்பது சுற்றுப்புறச்சூழலைக் காப்பது குறித்த விழிப்புணர்வு, மனம் திறந்த பேச்சுவார்த்தை ஆகியவை இந்த மாநாட்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது புத்தரின் கொள்கைகளை விளக்குவதாக உள்ளது.

இந்த மூன்று கொள்கைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக இருப்பதாக நினைக்கலாம், ஆனால் இவை அனைத்தும் ஒன்றே. இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை.

முதலாவதாக உள்ள மோதலை எடுத்துக் கொண்டால், மனிதர்கள், மதங்கள், நாடுகள் மற்றும் மாநிலங்கள் ஆகியவற்றிடம் உள்ளன. இதைத்தவிர உலகம் முழுவதும் இந்நிலை காணப்படுகிறது. நாடுகள் அற்ற சில அமைப்புகள் பெரிய அளவிலான நிலப்பரப்பை சொந்தமாக்கிக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டு, ஏதும் அறியா மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கி வருகின்றன.

இரண்டாவதாக உள்ள முரண்பாடு இயற்கை மற்றும் மனிதன், இயற்கை மற்றும் வளர்ச்சி, இயற்கை மற்றும் அறிவியல் ஆகியவற்றுக்கு இடையே உள்ளன. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தையின் மூலம் தான் தீர்வுகாண முடியும். ஆனால் இன்று அவ்வாறு நடப்பதில்லை.

ஆசிய நாட்டின் பாரம்பரியம் பற்றிய தத்துவத்தில் குறிப்பாக இந்து மதம் மற்றும் புத்த மதங்களில் சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்கனவே உள்ளது.

கன்ஃபூசியஸ், டாவோ, சின்டோ போன்ற மதங்களைப் போல புத்த மதமும் சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது. புத்த மதமும், இந்து மதமும் நாம் வாழும் பூமியின் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு பற்றி கூறுவதால், அதற்கு ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை எடுப்பது உகந்ததாகும்.

தற்போது தட்பவெட்பநிலை மாற்றம் உலகின் பெரிய சவாலாக இருந்து வருகிறது. மனித இனம் ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பழங்காலம் முதலே இந்தியாவில் இயற்கைக்கும், நம்பிக்கைக்கும் இடையே சிறந்த தொடர்பு இருந்து வந்துள்ளது. புத்த மதமும், சுற்றுப்புற பாதுகாப்பும் இணைந்தே உள்ளன.

புத்த மத பாரம்பரியத்தின்படி, இயற்கைக்கு அதன் கலாச்சாரம் மற்றும் வரலாறு முக்கியத்துவம் அளித்துள்ளது. புத்த மதக் கொள்கையின்படி, எந்தப் பொருளும் தனி நிலையில் இல்லாது ஒன்றோடொன்று இணைந்தே உள்ளன. சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் அசுத்தங்கள் நமது மனதை பாதிக்கின்றன. அதேபோல் மனது அசுத்தம் அடைந்தால், அதுவும் சுற்றுச்சூழலை பாதிக்கிறது, ஆகவே, சுற்றுச்சூழலை தூய்மையாக வைக்க வேண்டும் எனில் நமது மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

நமது மனதில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே தான், பகவான் புத்தர் இயற்கை வளங்களை பாதுகாக்க முக்கியத்துவம் அளித்தார். புத்த பிட்சுக்களிடம் நீராதாரங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்றும், அதேபோல் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். பகவான் புத்தரின் போதனைப்படி, இயற்கை, காடுகள், மரங்கள், மற்ற உயிரினங்கள் அனைத்துமே இதில் பங்குபெற வேண்டும்.

‘வசதியான செயல்பாடு’ என்ற தலைப்பில் நான் ஒரு புத்தகத்தை எழுதினேன், அதை முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் நான் முதலமைச்சராக இருந்த போது தட்பவெட்பநிலை மாற்றம் குறித்த என்னுடைய அனுபவங்களை அதில் கூறியுள்ளேன்.

இயற்கைக்கும், மனித இனத்திற்கும் உள்ள தொடர்பை வேத இலக்கியங்கள் கூறுவது பற்றி நான் தெரிந்து கொண்டேன், அதேபோல் மகாத்மா காந்தியும் கூறியுள்ளார் என்பதையும் நாம் அறிவோம்.

இதுகுறித்து நான் கூறுவது என்னவென்றால், இயற்கை வளங்களை எதிர்கால சந்ததியினருக்கு அளிக்கும் வகையில் அவற்றை பாதுகாக்க முழுப் பொறுப்பையும் தற்போதைய சந்ததியினர் மேற்கொள்ள வேண்டும். பிரச்சினை என்பது தட்பவெட்ப நிலை மாற்றம் குறித்து மட்டுமல்ல அதற்கு நாம் நீதி அளிக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டம். இதை நான் மீண்டும் கூறுகிறேன்.

தட்பவெட்பநிலை மாற்றம் ஏழைகளையும், நலிவுற்றோரையும் வெகுவாக பாதிக்கும் என்று நான் நினைக்கிறேன். இயற்கை பேரழிவுகள் வரும்போது, வெகுவாக பாதிப்படைபவர்கள் அவர்கள்தான். வெள்ளநிலைமை ஏற்படும் போது அவர்கள் வீடுகளை இழந்துவிடுகிறார்கள். பூகம்பம் ஏற்படும் போது அவர்களின் வீடுகள் அழிந்துவிடுகின்றன, வறட்சி ஏற்படும் போதும் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். குளிர் அதிகமாக இருக்கும் போது வீடற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தட்பவெட்பநிலை மாற்றத்தால் இதுபோன்ற மக்கள் பாதிக்கப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. ஆகவே தான் தட்பவெட்பநிலை மாற்றத்திலிருந்து, அதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.

மூன்றாவது கொள்கையான பேச்சுவார்த்தைகளை மேம்படுத்துதல். கொள்கை அடிப்படையிலிருந்து தத்துவார்த்த அடிப்படையில் இது மாற்றப்பட வேண்டும். பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்றால், மோதல்களை தீர்க்க முடியாது.

சண்டைகளைத் தீர்ப்பதற்கான முறைகள் தற்போது மிகவும் கடினமாகிவிட்டன. வன்முறை மற்றும் ரத்தக்களறி ஆகியவற்றை தடுப்பதற்கு தேவையான ஒருங்கிணைந்த உத்திகளை எடுக்க அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். ஆகவே புத்த மத கொள்கைகளை உலகம் எடுத்துக் கொள்வதில் எந்தவிதமான வியப்பும் இல்லை.

ஆசிய நாடுகளின் வரலாற்றுப் பாரம்பரியத்தின்படி, மோதல்களைத் தீர்ப்பதற்கு கொள்கை அடிப்டையிலிருந்து தத்துவார்த்த அடிப்படைக்குச் செல்லவேண்டும்.

இந்த மாநாட்டில் கூறப்படும் சாராம்சம் இரண்டு கொள்கைகளை உடையது. முதலாவதாக சண்டைகளைத் தீர்க்கும் வழி முறைகள், சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு. இவை பேச்சுவார்த்தைகள் பற்றிய பகுதியில் அடங்கும். அதில், “அவர்கள் என்பதிலிருந்து நாம் என்பதாக இருக்க வேண்டும்”. “கொள்கை அடிப்படை கண்ணோட்டத்திலிருந்து தத்துவார்த்த அடிப்படை கண்ணோட்டத்திற்கு வரவேண்டும்.” எந்த மதமாக இருந்தாலும் அல்லது மதசார்பற்ற நிலை இருந்தாலும் கொள்கையிலிருந்து தத்துவத்திற்கு மாறுவது அவசியம் என்பதை நாம் உலகிற்கு தெரிவிக்க வேண்டும்.

சென்ற ஆண்டு நான் ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது கொள்கை கண்ணோட்டத்திலிருந்து தத்துவ கண்ணோட்டத்திற்கு உலகம் மாற வேண்டும் என்று கூறினேன். அதற்கு அடுத்த நாள் வெளியுறவு துறைக்கான கவுன்சிலில் நான் பேசினேன், அப்போது இது குறித்து விரிவாகவே அங்கு விளக்கியுள்ளேன். தத்துவம் என்பது முடிவடைந்த எண்ணங்கள் அல்ல. கொள்கை என்பது முடிவடைந்த ஒரு விஷயமாகும். ஆகவே தத்துவ கண்ணோட்டத்தின் மூலம் நாம் செயல்படும் போது பேச்சுவார்த்தைகளை மட்டும் நாம் மேற்கொள்ளாமல், அதில் உள்ள உண்மைகளையும் தொடர்ந்து நாம் தேட இயலும். உபநிஷத்துக்கள் அனைத்தும் பேச்சு வார்த்தைகளின் அடிப்படையிலேயே உள்ளன. கொள்கைகள் குறித்த கண்ணோட்டத்தில் அதுபோன்ற நிலை இல்லை. ஆகவே கொள்கைகள் பேச்சுவார்த்தைகளின் கதவுகளை மூடிவிடுகின்றன, வன்முறை உருவாகிறது. ஆனால், தத்துவ அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் போது இவை ஏற்படுவதில்லை.

இந்து மற்றும் புத்த மதங்கள் நம்பிக்கை மட்டுமல்லாமல் தத்துவ கருத்துக்களையும் அதிகமாகக் கொண்டுள்ளன.

ஆகவே, பேச்சுவார்த்தைகளின் மூலம்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்பதை உறுதியாக நான் நம்புகிறேன். இதற்கு முன்பு தாக்குதல் தான் அதிகாரத்தை அளிக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் தற்போது பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் வலிமையின் மூலம் தான் இந்த அதிகாரத்தை நாம் அடைய முடியும். போரினால் ஏற்படும் அழிவுகளை நாம் கண்டோம். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டு உலகப் போர்களில் ஏற்பட்ட அழிவுகளை நாம் கண்டோம்.

தற்போது போரிடும் முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, அதனால் அபாயங்களும் அதிகமாகியுள்ளன. நூறாயிரம் போர் வீரர்கள் போர் புரிவது மற்றும் நீண்ட காலம் போர் புரிவது போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டு தற்போது ஒரு பட்டனை தட்டினால் ஒருசில நிமிடங்களில் அழிவு ஏற்பட்டுவிடும்.

அமைதி, ஒருவருக்கொருவர் மரியாதை அளித்தல், மதிப்பு ஆகியவற்றுடன் வருங்கால தலைமுறையினர் வாழ்வதற்கு நாம் அனைவரும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது நமது கடமையாகும். எந்தவிதமான போராட்டமும் இன்றி உலக மக்கள் வாழ புத்த மதம் மற்றும் இந்து மதம் ஆகியவற்றின் நம்பிக்கைகள் மிகப் பெரிய அளவில் பங்களிக்கின்றன.

பேச்சுவார்த்தை என்றால் எவ்விதமான பேச்சுவார்த்தை? பேச்சுவார்த்தைகளில் கோபதாபங்கள் இருக்கக் கூடாது, இதற்கு சிறந்த உதாரணமாக ஆதிசங்கரருக்கும், மண்டன மிஸ்ராவிற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளை கூறலாம்.

அக்காலத்தில் நடந்த இந்த உதாரணத்தை இக்காலக் கட்டத்திலும் கூறலாம். வேதத்தை நன்கு உணர்ந்தவரான ஆதிசங்கரர் இளைஞராகவும், மத சடங்குகளுக்கு அதிக அளவு முக்கியத்துவம் தராமலும் இருந்தார் என்றாலும், மண்டன மிஸ்ரா வயதானவராகவும், ஆனால் அதேநேரத்தில் சடங்குகளில் தீவிரமாகவும், உயிர் பலி அளிப்பபவராகவும் இருந்தார்.

முக்தியை அடைவதற்கு சடங்குகள் மிக முக்கியமானவை அல்ல என்று பேச்சுவார்த்தைகளின்போதும், வாதங்களின் போதும் ஆதிசங்கரர் கூறினார். ஆனால் மண்டன மிஸ்ரா, ஆதிசங்கரர் கூறுவது தவறு என்று வாதிட்டார்.

இந்தியாவில் அக்காலத்தில் இப்படித்தான் பல முக்கிய பிரச்சினைகளுக்கு அறிஞர்களிடையே வாதங்கள் நடைபெற்றன என்றாலும், அவை வீதிக்கு வரவில்லை. ஆதிசங்கரரும் மண்டன மிஸ்ராவுக்கும் இடையே நடந்த வாதங்களில் சங்கரரே வெற்றி பெற்றார். இதில் மிக முக்கியமானது வாதங்கள் பற்றியது அல்ல. ஆனால், அவை எவ்வாறு நடத்தப்பட்டன என்பதுதான். மனித இனம் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய வாதங்களில் மிக உயர்ந்தவை என்பதை இந்நிகழ்ச்சி விளக்கும்.

இந்த வாதங்களில் மண்டன மிஸ்ரா தோற்றுப்போனால், அவர், இல்லறத்தை விட்டு துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆதிசங்கரர் தோல்வியடைந்திருந்தால், துறவறத்தை விட்டுவிட்டு இல்லறத்திற்கு அவர் மாறவேண்டும்.

மண்டன மிஸ்ரா ஒரு சிறந்த அறிஞர். அவர், ஆதிசங்கரர் இளைஞனராக இருந்ததால், தமக்கு சமமாக அவரை கருதவில்லை ஆகவே தீர்ப்பு கூற சங்கரரே முடிவெடுக்க வேண்டும் கூறினார். அப்போது மண்டன மிஸ்ராவின் மனைவியும் அறிஞருமான அவரை தீர்ப்புக்கூற அழைத்தார்.

மண்டன மிஸ்ரா தோல்வியடைந்தால் அவரது மனைவியை அவர் இழப்பார். ஆனால் என்ன நடந்தது என்று பாருங்கள். மண்டன மிஸ்ராவின் மனைவி. சங்கரரையும், மிஸ்ராவையும் புதிய மலர் மாலைகளை அணியச் சொல்லி அவர்கள் வாதத்தை துவக்குமாறு கூறினார்.

யாருடைய மலர் மாலை வாடிப்போகிறதோ அவர்களே இந்த வாதத்தில் தோற்றவர்களாக கருதப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். ஏன்? ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவரது உடல் உஷ்ணம் அடைகிறது. அதனால் மலர் மாலைகள் வாடிப்போகின்ற நிலை ஏற்படும். கோபம் என்பது தோல்வியின் அடையாளம். இதன் அடிப்படையில் மண்டன மிஸ்ரா வாதத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகவே அவர் துறவறத்தை மேற்கொண்டு சங்கரருக்கு சீடரானார். இந்த வாதங்களிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், பேச்சுவார்த்தைகளின் தன்மையும், அப்போது கோபத்திற்கு இடம்கொடுக்காமல் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிகிறது.

இன்று இங்கு கூடியுள்ள அனைவரும் பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ளவர்கள். வாழ்க்கை முறைகள் வேறுபாடுகளுடன் இருந்தாலும், நமது வரலாறு, கலாச்சாரம், தத்துவம் ஆகியவற்றின் வேர்கள் உள்ளன. புத்த மதமும் அதன் பாரம்பரியமும் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் உள்ளது.

இந்த நூற்றாண்டு ஆசிய நாடுகளுக்கு சொந்தமானது என்று அவர்கள் கூறுகிறார்கள். கவுதம புத்தர் கூறிய போதனைகளின் வழியில் நாம் செல்லவில்லை என்றால், இந்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக இருக்காது என்பதை நான் உறுதியுடன் கூறுகிறேன்.

உலக வர்த்தகம் எவ்வாறு நம்மை இணைத்ததோ, டிஜிட்டல் தொழில்நுட்பம் எவ்வாறு அறிவுசார்ந்த மக்களை இணைத்ததோ, அதேபோல புத்தரின் கொள்கைகள் நம்மை ஒன்றிணைத்தன.

21-வது நூற்றாண்டில் நாடுகளின் எல்லை, நம்பிக்கைகள், அரசியல் கொள்கைகள், ஆகியவற்றுக்கு பாலமாக பகவான் புத்தரின் கொள்கைகள் அமைந்துள்ளன. புத்தரின் கொள்கைகளான பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை நம்மை விழிப்புணர்வை ஊட்டுகின்றன.

புத்த மதத்தின் பாரம்பரியத்தை விளக்கும் இந்நாட்டில் நீங்கள் பயணம் மேற்கொள்வது குறித்து நான் உண்மையாகவே பெருமைப்படுகிறேன். எனது சொந்த கிராமமான குஜராத்தில் உள்ள வாத்நகர் என்ற இடத்தில் புத்த மத சின்னங்கள் கிடைத்துள்ளன. சீனாவிலிருந்து அறிஞர் யுவான்சுவாங் இங்கு பயணம் மேற்கொண்டார்.

புத்த மத கொள்கைகளை விளக்கும் ஆன்மிக தலங்கள் சார்க் நாடுகளில் உள்ளன. லும்பினி, புத்த கயா, சார்நாத், குஷிநகர் ஆகிய இடங்கள் அவை.

ஆசியான் நாடுகள் மற்றும் சீனா, கொரியா, ஜப்பான், மங்கோலியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்தும் இந்த இடங்களுக்கு பயணிகள் வருகின்றனர்.இந்தியாவில் புத்த மத பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எனது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆசியாவில் பல நாடுகளில் இந்த பாரம்பரியத்தை பரப்ப இந்தியா முன்நின்று நடத்துகிறது, தற்போது நடக்கும் மூன்று நாள் மாநாடும் இதற்கான முயற்சியே.

அடுத்த மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் கூட்டங்களில் பல கருத்துக்கள் உருவாகும். அமைதி, தூய்மையான சுற்றுச்சூழல், மோதல் இல்லாத சூழ்நிலை ஆகியவற்றை உருவாக்க நாம் ஒன்றிணைந்து வழிகாண வேண்டும்.

புத்த கயாவில் உங்களை நான் காண விழைகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x