

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பதால், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.
மோடி பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சேவை அழைத்ததற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
‘ராஜபக்சேவை அழைத்த செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல உள்ளது. இதைத் தவிர்த்திருந்தால், புதிதாக அமையவுள்ள மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான உறவு சிறப்புடையதாக அமைந்திருக்கும்’ என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார். ராஜபக்சேவை அழைக்கக் கூடாது என்ற முதல்வர் மற்றும் தமிழக கட்சிகளின் கோரிக்கையை பாஜக நிராகரித்துவிட்டது.
கடந்த 2011-ம் ஆண்டு மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றபோது, அந்த விழாவில் நட்பு அடிப்படையில் நரேந்திர மோடி பங்கேற்றார். அதேபோல, 2012-ல் குஜராத் முதல்வராக நரேந்திரமோடி பதவியேற்றபோது அதில் ஜெயலலிதா பங்கேற்றார். இருவருக்கும் நீண்டகாலமாக நல்ல நட்புறவு இருப்பதால் பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து அதிகாரபூர்வமாக ஞாயிற்றுக்கிழமை மாலை வரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்வதால் இந்த விழாவில் ஜெயலலிதா கலந்துகொள்ள மாட்டார் என்றும் தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கேரள, கர்நாடக முதல்வர்கள் பங்கேற்கவில்லை
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கேரளம் மற்றும் கர்நாடக முதல்வர்களும் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரியவந்துள்ளது.
“தவிர்க்க முடியாத நிகழ்ச்சி கள் இருப்பதால் தன்னால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலாது” என மோடியிடம் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துவிட்டார்.
இதுபோல் கர்நாடக முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், “மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் சித்தராமையா டெல்லி செல்ல மாட்டார்” என்றனர்.