

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்தும், துணை முதல்வர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரிடமும், அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதனால் சச்சின் பைலட் தனியாக ஒரு அணியாகச் செயல்படத் தொடங்கியதால் ஆளும் அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு வருமாறு காங்கிரஸ் கட்சியின் கொறடா உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதில் சச்சின் பைலட், விஸ்வேந்திர சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோர் வராததால் அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதற்காக சச்சின் பைலட்டை மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியும், துணை முதல்வர் பதவியைப் பறித்தும் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்தது. அதேபோல, அமைச்சர்களாக இருந்த விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரின் பதவியும் பறிக்கப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் கொறடாவுமான அவினேஷ் பாண்டே , சபாநாயகர் சி.பி.ஜோஷியிடம், காங்கிரஸ் சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு வராத 19 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, சச்சின் பைலட் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத அவரின் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸுக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்கும்படி சபாநாயகர் கோரியுள்ளார்.
எம்எல்ஏக்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு எம்எல்ஏ பதவி பறிக்கப்படுமா அல்லது பதவியில் தொடர்வார்களா என்பது தெரியவரும்.
இதனால் சச்சின் பைலட், அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்படவே வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.