

ராஜஸ்தானில் போர்க்கொடி தூக்கி அசோக் கெலாட் தலைமை காங்கிரஸ் ஆட்சியை அச்சுறுத்தியுள்ள சச்சின் பைலட், தான் இன்னும் கூட காங்கிரஸ் நபர்தான் என்றும் பாஜக-வில் சேர மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சச்சின் பைலட் கூறும்போது, “நான் பாஜகவில் இணையமாட்டேன். நான் இதனை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பாஜகவுடன் என்னை தொடர்புப் படுத்தி பேசுவது என்பது காங்கிரஸ் தலைமை முன்பு என் பெயரைக் கெடுப்பதற்காகவே. பாஜகவை தோற்கடிக்கவே நான் பாடுபட்டேன்.
நான் இன்னமும் காங்கிரஸ் உறுப்பினர்தான், ராஜஸ்தான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக இன்னொரு தனியார் ஆங்கில ஊடகத்திடம் அவர் கூறும்போது, “ராகுல் காந்தி கட்சி தலைமைப் பதவியிலிருந்து கடந்த ஆண்டு விலகியதையடுத்து கெலாட் மற்றும் அவரது சகாக்கள் எனக்கு எதிராகத் திரண்டனர். இதற்குப் பிறகே என் சுயமரியாதைக் காத்துக் கொள்வது போராட்டமாக மாறியது.
ராஜஸ்தான் வளர்ச்சிக்காக நானும் என் தொண்டர்களும் பணியாற்ற கெலாட் விடவில்லை. அதிகாரிகளிடம் சொல்லி என் பேச்சைக் கேட்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர். கோப்புகள் என்னிடம் வரவில்லை. மக்களுக்காக நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை எனில் எதற்காக பதவியில் இருக்க வேண்டும்.
பாஜகவின் கரங்களில் நான் வீழ்ந்து விட்டேன் என்பது தவறு, பாஜகவை தோற்கடிக்கத்தான் அயராது பணியாற்றினேன், அப்படியிருக்கும் போது நான் ஏன் என் கட்சிக்கு எதிராகவே செயல்படப்போகிறேன்?
நான் பாஜகவில் சேரப்போகிறேன் என்பவர்கள் என் பெயரைக் கெடுக்க விரும்புகிறார்கள். என் பதவிகளைப் பறித்த போதும் கூட கட்சிக்கு எதிராக நான் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை, பிரியங்கா காந்தியுடன் பேசினேன். ஆனால் அது எந்த தீர்வையும் அளிக்கவில்லை.” என்றார் சச்சின் பைலட்.