Last Updated : 15 Jul, 2020 08:28 AM

 

Published : 15 Jul 2020 08:28 AM
Last Updated : 15 Jul 2020 08:28 AM

கான்பூரில் 8 போலீஸார் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்ட குற்றவாளி கைது: விகாஸ் பறித்த நிலங்களை திரும்ப ஒப்படைக்கவும் நடவடிக்கை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் ரவுடி விகாஸ் துபேவை கைது செய்யச்சென்ற போலீஸாரில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து போலீஸாரின் தேடுதல் வேட்டையின்போது விகாஸ் துபே உள்ளிட்ட 6 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 7 பேர் தனியாக கைதாகி உள்ளனர்.

இதில் சோனு பாண்டே என்றழைக்கப்படும் சசிகாந்த், சவுபேபூரில் நேற்று முன்தினம்நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.முன்னதாக, சசிகாந்த் தலைக்குரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. கான்பூர் போலீஸாரிடம் இருந்து பறிக்கப்பட்ட இன்ஸாஸ் வகை துப்பாக்கியும், குண்டுகளும் சசிகாந்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இவர் கொடுத்த தகவலின் பேரில் பிக்ருவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏகே-47 துப்பாக்கியும், குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தகவலை நேற்று உ.பி. ஏடிஜிபி பிரஷாந்த் குமார் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையே, கான்பூர் போலீஸார் கொல்லப்பட்ட பிறகு சசிகாந்தின் மனைவி, விகாஸின் மனைவியான துபேவுக்கு போன் செய்து பேசிய குரல் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில், அவர், "அக்கா, சகோதரர் விகாஸ் எனது வீட்டின் முன்பாக இருவரை சுட்டுக் கொன்று விட்டார். எனது வீட்டுப் பின்பக்கமும் ஒரு உடல் கிடக்கிறது. அனைவரும் இங்கிருந்து ஓடி விட்டனர். இனி போலீஸார் வந்து என்னைக் கேட்டால் என்ன சொல்வது?" எனக் கூறுவது போன்று குரல் பதிவு உள்ளது. இதன் மீதும் விசாரணை தொடங்கியுள்ளது.

இதனிடையே, விகாஸ் துபே மற்றும் அவனது சகாக்கள் மீது 1990-ம் ஆண்டு முதல் 60-க்கும் மேற்பட்ட கிரிமினல், 5 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன் பிறகும் அனைவரும் அரசு உரிமம் பெற்ற துப்பாக்கிகளுடன் வலம் வந்துள்ளனர்.

இவை பறிமுதல் செய்யப்படவில்லை என தற்போது தெரியவந்துள்ளது. இதற்கு பொறுப்பான அதிகாரிகளிடமும் விகாஸ் வழக்கில் உ.பி. அரசு அமைத்த எஸ்ஐடி விசாரிக்க உள்ளது. இதில் கான்பூரில் பதவி வகித்த அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.

பிக்ரு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பலரையும் மிரட்டி விகாஸ் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, அப்துல் ஜலீல், ஜலாலுதீன், கபூர்கான், ஜிலேந்தர் யாதவ், லல்லன் யாதவ், லால் முகம்மது, ராம்ஜி ஆகியோரின் பல ஏக்கர் அளவிலான நிலங்களை விகாஸ் 20 வருடங்களாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளார். இவர்கள் கான்பூர் மாவட்ட ஆட்சியரிடம் செய்த புகாரின் பேரில் அவற்றை திரும்ப ஒப்படைக்கும் பணி தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x