

அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்கா உலகின் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் மிகப்பெரிய புகலிடமாக விளங்குகிறது. இந்நிலையில் அசாமில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரம்மபுத்ரா உள்ளிட்ட 13 நதிகள் மற்றும் அவற்றின் துணை நதிகளில் அபாய அளவுக்கு மேல் வெள்ளம் பாய்கிறது. மாநிலத்தின் 27 மாவட்டங்களில் வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் சுமார் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் கனமழை தொடர்பான சம்பவங்களில் நேற்று முன்தினம் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த ஆண்டு மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
சுமார் 430 சதுர கி.மீ. பரப்பளவுள்ள காசிரங்கா தேசியப் பூங்காவின் 95 சதவீதப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் 51 விலங்குகள் உயிரிழந்தன. சுமார் 100 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன. காசிரங்கா பூங்காவின் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 37-ல் போக்குவரத்து முடங்கியுள்ளது. காசிரங்கா பூங்காவை உள்ளடக்கிய பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு பகுதியில் 2,816 கிராமங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.