உலகின் மருந்தகம் இந்தியா; கரோனாவுக்கும் மருந்தை உருவாக்கும்: ஐசிஎம்ஆர் நம்பிக்கை

பல்ராம் பார்கவா
பல்ராம் பார்கவா
Updated on
1 min read

உலகம் முழுவதும் பல்வேறு நோய்களுக்கு தற்போது பயன்பாட்டில் தடுப்பு மருந்துகளில் 60 சதவீதம் இந்தியா கண்டுபிடித்தது தான், கரோனா தடுப்பு மருந்தையும் இந்தியா உருவாக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனாவுக்கு 2 தடுப்பு மருந்துகள் தற்போது ஆய்வில் உள்ளன. இது முழுக்க முழுக்க இந்தியாவின் முயற்சியில் நடைபெறுகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

கோவாக்ஸின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து கரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தகக்து.

கிளினிக்கல் ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகள் அனைத்தையும் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கிறது எனும் பரிசோதனையும் முடித்துள்ள நிலையில், இரு கட்டங்களாக மனிதர்களுக்கு மருந்தைச் செலுத்தி பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம், ஐசிஎம்ஆர் ஆகியவை அனுமதி வழங்கின.

இதேபோன்று மேலும் ஒரு தடுப்பு மருந்து சோதனை அளவில் உள்ளது. காடில்லா ஹெல்த்கேர் நிறுவனம் ஒரு மருந்தையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியதாவது:
இந்தியாவை பொறுத்தவரை உலகின் மருந்தகமாகவே கருதப்படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நோய்களுக்கு தற்போது பயன்பாட்டில் தடுப்பு மருந்துகளில் 60 சதவீதம் இந்தியா கண்டுபிடித்தது தான்.

அமெரிக்கா, ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா என பல பகுதிகளிலும் தற்போது இந்தியா உருவாக்கிய தடுப்பு மருந்துகளே பயன்பாட்டில் உள்ளன. அதுபோலவே கரோனா தடுப்பு மருந்தையும் இந்தியா உருவாக்கும்.’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in