

ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டதால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவரங்களை சச்சின் பைலட் நீக்கினார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் உள்ளனர். ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக முதல்வர் அசோக் கெலாட் சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனால் கோபம் அடைந்த சச்சின் பைலட், தனது ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் உள்ள ஓட்டலில் முகாமிட்டுள்ளார். பாஜக மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை நேற்று முன்தினம் அவர் சந்தித்துப் பேசினார். இதனால் சச்சின் பைலட் பாஜக.வில் சேருவாரா என்று பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் ஜெய்ப்பூரில் நேற்று காலை காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால்,சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களான 20 எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் தனது ஆதரவு எம்எல்ஏக்களை ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளார். அந்த சொகுசு விடுதியில் இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 102 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது.
சச்சின் பைலட் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கக்கோரி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார். 2 அமைச்சர்களும் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் மேலிட பார்வையாளர் ரண்தீப் சுர்ஜேவாலா இதனை ஜெய்ப்பூரில் அறித்தார். மேலும் அவர் கூறுகையில் ‘‘பாஜக விரித்த வலையில் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் விழுந்து விட்டனர்’’ எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து சச்சின் பைலட் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது விவரக்குறிப்பு பகுதியில் ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் மாநில காங்கிரஸ் தலைவர் என்ற தனது பதவி விவரங்களை நீக்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் எம்எல் என்ற விவரம் மட்டுமே அவரது குறிப்பில் தற்போது உள்ளது.
இதனிடையே ஜெய்ப்பூர் காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் என்ற பெயர் பலகை நீக்கப்பட்டுள்ளது.