

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமை காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதையடுத்து துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார், இவருடன் மேலும் 2 அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்பட்டது. மேலும் சச்சின் பைலட்டின் மாநிலக் கட்சித் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தையும் சச்சின் பைலட் புறக்கணித்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவரோடு விஸ்வேந்திர சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரது அமைச்சர் பதவிகளும் பறிக்கப்பட்டு விட்டன, இதனை காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா அறிவித்தார்.
கல்வி இணை அமைச்சர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியதையடுத்து முதல்வர் அசோக் கெலாட் 107 காங்கிரஸ் எம்.எல்.எ.க்கள் 15 சுயேச்சைகள் மற்றும் பிறரை அழைத்திருந்தார். 122 எம்.எல்.ஏ.க்களில் 106 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மீதி 16 எம்.எல்.ஏ.க்கள் தன்னுடன் சேர்ந்திருப்பதாக சச்சின் பைலட் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால் இதில் சச்சின் பைலட் இல்லை. சச்சின் பைலட்டுக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறும்போது அவருடன் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் 3 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் இருப்பதாகக் கூறுகின்றனர்.
காங்கிரஸுடன் கூட்டணியிலிருந்த பாரதிய பழங்குடி கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், இந்தக் கட்சி காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டது, மேலும் அசோக் கெலாட்டையோ, சச்சின் பைலட்டையோ ஆதரிக்க வேண்டாம் நடுநிலை காக்க முடிவெடுத்துள்ளது. ஆனால் இந்த 2 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸுடன் இணைய விருப்பம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நெருக்கடிகளுக்கிடையில் ராஜஸ்தான் நிலவரம் பற்றி பாஜக தலைவர்கள் இது குறித்து விவாதிக்க கூடியுள்ளனர். பாஜக மாநில அலுவலகத்தில் சந்திப்பு தொடங்கியது. பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, எதிர்க்கட்சி உதவித் தலைவர் ராஜேந்திர ராத்தோர் ஆகியோர் கூட்டத்தில் இருந்தனர்.