

திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாகி அனில்குமார் சிங்கால் நேற்று கூறியதாவது:
கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் கரோனா தொற்று பரவாமல் இருக்க ஏழுமலையான் தரிசனம் பக்தர்களுக்கு நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய அரசின் அனுமதியுடன் கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் பக்தர்களுக்குதரிசன அனுமதி வழங்கப்பட்டது.
திருமலையில் 1,865 தேவஸ்தான ஊழியர்களுக்கும், அலிபிரி சோதனைச் சாவடி அருகே 1,704 தேவஸ்தான ஊழியர்களுக்கும் கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், 631 பக்தர்களுக்கும் சுழற்சி முறையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இதுவரை 91 தேவஸ்தான ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இம்முறை புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து அதிகாரிகள், ஜீயர்கள், ஆகம வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும். ஆனால், இப்போதிலிருந்தே இதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவம் சமயத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு எந்த அளவு உள்ளது என்பதைப் பொறுத்து பக்தர்களை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.