Published : 13 Jul 2020 09:34 PM
Last Updated : 13 Jul 2020 09:34 PM

ஐந்து நட்சத்திர சொகுசு விடுதியில் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

ராஜஸ்தானில் கூட்டம் முடிந்ததும் கெலோட் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல 5 நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அசோக் கெலோட்டின் நடவடிக்கையால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

ராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும்விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

எனினும் மாநிலங்களவைத் தேர்தல் பிரச்சினை இன்றி நடந்து முடிந்தது. இந்தநிலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயலுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இந்நிலையில் துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

அவருக்கு குறிப்பிட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிகிறது. சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லி அருகே குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியானது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக கொறாடா உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இன்றையக் கூட்டத்தில் 97 எம்எல்ஏக்கள் பங்கேற்றதாக தெரிகிறது. எனினும் சச்சின் பைலட் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 200 எம்எல்ஏக்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள 100 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும் என்பதால் காங்கிரஸ் வட்டாரத்தில் இன்னமும் பதற்ற நிலையே காணப்படுகிறது. தங்களுக்கு 109 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து எம்எல்ஏக்களை எதிர் தரப்பினர் தங்கள் அணிக்கு அழைத்துச் சென்றுவிடாமல் தடுக்கும் பொருட்டு, சட்டப்பேரவை கட்சிக் கூட்டம் முடிந்ததும் கெலோட் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் பேருந்துகளில் ஏற்றப்பட்டு சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பேருந்தில் இருந்து இறங்கி வரும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

அவர்களுடன் முதல்வர் அசோக் கெலோட்டும் பேருந்தில் சென்றார். எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல 5 நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜெய்ப்பூரின் புறநகர் பகுதியில் டெல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த சொகுசு விடுதியை சுற்றி பலத்த போலீ்ஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x