Last Updated : 13 Jul, 2020 08:16 PM

 

Published : 13 Jul 2020 08:16 PM
Last Updated : 13 Jul 2020 08:16 PM

பாஜகவை நோக்கிப் பறக்கும் பைலட்?- ம.பி. பாணியில் ராஜஸ்தான் காங்கிரஸில் புயல்

காங்கிரஸுக்கான சோதனைக் காலம் அத்தனை எளிதில் முடிந்துவிடாது போலிருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்னர், மத்தியப் பிரதேசக் காங்கிரஸிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறியதால் கமல்நாத் ஆட்சியே கவிழ்ந்தது. அதுபோல தற்போது ராஜஸ்தான் காங்கிரஸ் அரசிலும் கடுமையான புயல் வீசுகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் உச்சமடைந்திருக்கிறது.

தனக்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சச்சின், தனது ஆதரவாளர்களுடன் குருகிராம் நகரில் முகாமிட்டிருக்கிறார். மறுபுறம், 97 எம்எல்ஏக்கள் தன் இல்லத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்ததாக அசோக் கெலாட் தரப்பு முஷ்டி தட்டுகிறது. 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சியில் 3 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் சச்சினை முன்னிலையில் வைத்துக்கொண்டு திரைமறைவில் பாஜக காய் நகர்த்துவதாகக் கருதப்படுகிறது. பாஜகவில் சேரவில்லை என்று சச்சின் சொன்னாலும், பாஜக தலைவர்களுடன் அவரது தரப்பு பேசிவருவதாகவே செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அதிகார மோதல்

2018-ல் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அமைந்ததிலிருந்தே முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் சச்சினுக்கும் இடையில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் தலைதூக்கின. அந்தத் தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு சச்சினின் கடும் உழைப்பு முக்கியக் காரணியாக அமைந்தது. உண்மையில், ராஜஸ்தானில் 2013 சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பின்னர், அம்மாநிலத்தில் கட்சியைப் பலப்படுத்த சச்சினைத்தான் முன்னிறுத்தினார் ராகுல் காந்தி. 2018 தேர்தலில் மாநிலத்தில் குறுக்கும் நெடுக்குமாகச் சுமார் 5 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்து, அந்தத் தேர்தலில் வெல்ல உதவினார் சச்சின். அதன் பலனாகத் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்தார் சச்சின். ஆனால், பல்வேறு காரணங்களால் அசோக் கெலாட்டையே முதல்வராக்கியது காங்கிரஸ் தலைமை. கையோடு, சச்சினைத் துணை முதல்வராக்கி அவரைச் சமாதானப்படுத்தியது.

ஆனால், பிரச்சினைகள் ஒருகட்டத்தில் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தன. நான்கு அமைச்சகங்களின் பொறுப்புகளைத் தன் வசம் வைத்திருந்த சச்சினுக்குக் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தது அசோக் கெலாட் தரப்பு. அந்தத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் நியமனத்தில் முதல்வர் நேரடியாகத் தலையிட்டது சச்சினுக்குக் கடும் அதிருப்தியைக் கொடுத்தது. உள்துறை அமைச்சகம் அசோக் கெலாட்டின் வசம் இருக்கும் நிலையில், ராஜஸ்தானில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை இருப்பதாக சச்சினும் விமர்சிக்க ஆரம்பித்தார்.

பெஹ்லு கானைப் படுகொலை செய்த பசு குண்டர்கள் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக அரசின் செயல்பாடுகளை சச்சின் விமர்சித்தார். கோட்டாவில் உள்ள ஜே.கே.லோன் மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணமடைந்த சம்பவத்தின்போதும் அரசின் மீது குற்றம்சாட்டினார். குறிப்பாக, அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் சுகாதாரத் துறை அமைச்சர் ரகு ஷர்மாவைக் கடுமையாகச் சாடினார். அதேபோல், 2019 மக்களவைத் தேர்தலில், தனது மகன் வைபவ் தோல்வியடைந்ததற்கு சச்சின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அசோக் கெலாட் குற்றம் சாட்டினார்.

தவிர, 6 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜஸ்தான் மாநிலக் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் சச்சின் இருப்பதை அசோக் கெலாட் தரப்பு ரசிக்கவில்லை. அந்தப் பொறுப்பிலிருந்து அவரை வெளியேற்றும் முயற்சிகளில் இறங்கியது.

ஜூன் 19-ல் நடந்த மாநிலங்களவைத் தேர்தலின்போதும் இந்த மோதல் இன்னும் வீரியமாக வெளிப்பட்டது. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலேயே இரு தரப்புக்கும் இடையே முரண்கள் இருந்தன. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க பாஜக முயல்வதாக அசோக் கெலாட் குற்றம்சாட்டி வந்தார். அதன் வழியாக மறைமுகமாக சச்சினின் நம்பகத்தன்மையை அவர் கேள்விக்கு உட்படுத்தியிருந்தார். ஆனால், அந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட இருவரும் வெற்றி பெற்றனர். இதையடுத்து, அந்தப் புகார்கள் ஆதாரமற்றவை என்று சச்சின் திருப்பியடித்தார்.

இதற்கிடையே, ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பது தொடர்பாக சிலர் செல்போனில் பேசிக்கொண்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, ஜூலை 10-ல் ராஜஸ்தான் மாநிலக் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. அந்தப் புகார் தொடர்பாக ஜூலை 10-ல், சச்சினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதுதான் மோதலை உச்சகட்டத்துக்குக் கொண்டு சென்றது.

காங்கிரஸ் தலைமையின் பொறுப்பின்மை

ஆரம்பத்திலிருந்தே இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை காத்திரமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. கடந்த ஜனவரியில்தான் இவ்விவகாரத்தைக் கவனிக்க ஓர் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்தது. ஆனால், இக்குழு இதுவரை ஒரு முறைதான் கூட்டம் நடத்தியிருக்கிறது. இதுதவிர, ராகுல் காந்தியே நேரடியாகத் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தவும் முயன்றிருக்கிறார். அதிலும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

காங்கிரஸ் மேலும் மேலும் பலவீனமடைந்து வருவதுதான் இதுபோன்ற குழப்பங்களுக்குக் காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. கட்சியின் தலைமைப் பொறுப்பை ராகுல் மீண்டும் ஏற்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், அவர் பிடிகொடுக்க மறுக்கிறார். தவிர புதிய தலைவரையும், புதிய செயற்குழுவையும் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நீண்டநாட்களாக நிலவும் எதிர்பார்ப்பும் இதுவரை நிறைவேறவில்லை.

மாநில அளவில் செல்வாக்குடன் இருக்கும் எந்தத் தலைவரையும் காங்கிரஸ் தலைமை வளரவே விடாது எனும் விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி, மகாராஷ்டிரத்தில் சரத் பவார், ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி என காங்கிரஸின் மாநிலத் தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிவிட்டனர். அந்த மாநிலங்களில் காங்கிரஸின் அரசியல் பலம் வெகுவாகக் குறைந்துவிட்டது. செல்வாக்கான இளம் தலைவர்கள் எதிர்காலத்தில் ராகுல் காந்திக்குச் சவாலாக வந்துவிடுவார்கள் எனும் அச்சத்தில் காங்கிரஸ் தலைமை இப்படிச் செய்கிறது என்றும் சிலர் விமர்சிக்கிறார்கள்.

பாஜக விரிக்கும் வலை

மத்தியப் பிரதேச காங்கிரஸிலிருந்து சிந்தியா விலகி, ஆட்சியைக் கவிழ்த்தபோதே பாஜகவின் அடுத்த குறி சச்சின்தான் என்று பேசப்பட்டது. அதற்கான முயற்சிகளைப் பாஜக எடுத்துக்கொண்டேதான் இருந்தது. ஒருபக்கம், ‘இதெல்லாம் காங்கிரஸின் உட்கட்சிப் பிரச்சினை. எங்களுக்கு இதில் துளியும் தொடர்பு இல்லை’ என்று சொல்லிக்கொள்ளும் பாஜக, தனக்கான தருணத்துக்காக எப்போதுமே காத்திருக்கிறது. காங்கிரஸ் அரசில் சிறிய கீறல் தென்பட்டாலும் அதைப் பெரிய பிளவாக்கி ஆட்சியைக் கைப்பற்றும் அரசியலை அக்கட்சி தொடர்ந்து முன்னெடுக்கிறது.

இப்போதும்கூட, “ராஜஸ்தான் முதல்வராவதற்கு சச்சின் பைலட்தான் தகுதியானவர். ஆனால், அந்தப் பொறுப்பை அசோக் கெலாட் எடுத்துக்கொண்டார். அதனால்தான் இந்த மோதல் உருவாகியிருக்கிறது” என்று ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா போன்றோர் கூறிவருகிறார்கள்.

அதேபோல் சிந்தியாவும், “காங்கிரஸில் திறமைக்கு மதிப்பில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது” என்று பேசிவருகிறார். சிந்தியாவும் சச்சினும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தலைவர்களுடனான சச்சினின் பேச்சுவார்த்தையில் சிந்தியாவுக்கும் பங்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போது பல்வேறு ஊகங்கள் முன் வைக்கப்படுகின்றன. காங்கிரஸ் தலைமை இதில் தலையிட்டு, இரு தரப்பையும் சமாதானப்படுத்தலாம்; அதன் தொடர்ச்சியாக முதல்வரின் தலையீடுகள் இன்றி சச்சின் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படலாம். இரண்டாவதாக, சச்சின் வெளியேறினாலும் கெலாட்டுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை எப்படியாவது தக்கவைத்துக் கொள்வது; அதன் மூலம் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வது போன்றவற்றுக்கான சாத்தியக்கூறுகளும் காங்கிரஸுக்கு உண்டு.

நெருங்கும் கிளைமாக்ஸ்

ஒருவேளை, இந்தக் கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கி, பாஜகவில் சச்சினும் அவரை ஆதரிப்பதாகச் சொல்லப்படும் 30 எம்எல்ஏக்களும் சேர்ந்துவிட்டால், கட்சித்தாவல் சட்டப்படி அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள். சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையும் குறைந்துவிடும். கூட்டணிக் கட்சிகள், சுயேச்சை உறுப்பினர்களின் துணையுடன் பாஜக ஆட்சியமைத்துவிடும்.

இதற்கிடையே தன்னைச் சந்திக்குமாறு சச்சினுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், சச்சின் அந்த அழைப்பைத் தட்டிக்கழித்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. சிந்தியாவும் இதைத்தான் செய்தார். நேரில் சந்திக்குமாறு சிந்தியாவுக்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்தது. ஆனால், அதைப் புறக்கணித்துவிட்டு அமித் ஷாவைச் சந்தித்தார். பாஜகவில் இணைந்தார்.

கிளைமாக்ஸ் நெருங்கும் சூழலில், கடைசி அஸ்திரத்தைக் காங்கிரஸ் பயன்படுத்திப் பார்க்கிறது. ஏற்கெனவே, அகமது படேல், கே.சி.வேணுகோபால் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் இரு தரப்பிடமும் பேசிவரும் நிலையில், அந்தப் பணியில் பிரியங்கா காந்தியும் இறங்கியிருக்கிறார். அசோக் கெலாட், சச்சின் ஆகிய இருவரின் மதிப்பைப் பெற்றவர் எனும் முறையில் இந்த முயற்சியில் அவர் வெற்றி பெறுவார் என்று காங்கிரஸ் கட்சியினர் நம்புகிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசைக் கவிழ்த்துவிட்டு, பாஜகவில் இணைந்த சிந்தியா, அம்மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹானுக்குப் பெரும் சவாலாக இருக்கிறார். சமீபத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், புதிதாகப் பொறுப்பேற்கும் 28 அமைச்சர்களில் 11 பேர் சிந்தியாவின் ஆதரவாளர்கள். இதையெல்லாம் பார்க்கும்போது சச்சினுக்கும் சபலம் இருக்கத்தானே செய்யும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x