

கேரள அரசியலை உலுக்கிவரும் 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டி அவரின் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி முடிவு செய்துள்ளது.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் கடந்த மாதம் 30-ம் தேதி திருவனந்தபுரம் விமானநிலையத்தில் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித் குமாார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது தங்கம் கடத்தல் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு(என்ஐஏ) மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவரையும் என்ஐஏ அமைப்பினர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரக தூதரத்தின் முன்னாாள் ஊழியர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை மேலாளராகாகவும் இருந்தபோதுதான் இந்த குற்றச்சாட்டில் சிக்கினார்.
இந்த விவகாரம் வெளியானது தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், முதல்வரின் தனிப்பரிவுச் செயலாளராகவும் இருந்த சிவசங்கரன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஒரு ஆண்டு விடுப்பில் சென்றுள்ளார்.
இந்நிலையில் தங்கம் கடத்தல் விவகாரத்தை தீவிரமாகக் கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி வருகின்றன. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும எனக் கோரி சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பென்னி பெஹனன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ தங்கம் கடத்தலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி முதல்வர் அலுவலகத்தில் ப ணியாற்றியவர். இந்த விவகாரத்தில் முதல்வருக்கு அனைத்து விவரங்களும் தெரியும். குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களை மறைக்க முதல்வர் அலுவலகம் முயல்கிறது.
இந்த விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிஅரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும், முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டும் எனக் கோரியும் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர உள்ளோம்.
தங்கம் கடத்தல் விவகாரத்தில் தொடர்பாக முக்கியக் குற்றவாளியுடன் சபாயநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு முக்கியத் தொடர்பு இருக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம்.
முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய தனிச்செயலாளரும், ஐடி பிரிவு செயலாளருமான சிங்கங்கரன் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் நீண்ட விடுப்பில் செல்ல ஏன் அனுமதிக்கப்பட்டது
இவ்வாறு பெஹனன் தெரிவித்தார்