

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நல்ல நிலையில் இந்தியா இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியதிலிருந்து மத்திய அரசு போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். லாக்டவுன் காலத்தை முறையாகப் பயன்படுத்தவில்லை, கரோனா வைரஸ் பரவல் குறைந்து வளைகோடு சாய்வதற்குப் பதிலாக பொருளாதார வளர்ச்சிக் கோடு சாய்ந்துவிட்டது என்று மத்திய அரசை அவர் விமர்சித்தார்.
லாக்டவுனை உலக நாடுகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தின, இந்தியா எவ்வாறு நடைமுறைப்படுத்தியது என்பது குறித்து ட்விட்டரில் வரைபடங்களை வெளியிட்ட ராகுல் காந்தி, மத்திய அரசின் செயல்பாட்டை விமர்சித்தார்.
லாக்டவுன் காலத்தில் வேலையிழந்து வறுமையால் வாடும் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழை மக்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ.7,500 நேரடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என ராகுல் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஊரடங்கு தொடங்கி ஏறக்குறைய 100 நாட்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் இந்தியாவில் கரோனா பாதிப்பு 8.50 லட்சத்தைக் கடந்துள்ளது. 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம், கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 5.50 லட்சமாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, “கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா நல்ல நிலையில் இருக்கிறது. கரோனாவை ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன், ஆர்வத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதைக் கிண்டல் செய்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் பரவல் வரைபடத்தை வெளியிட்டு அமித் ஷாவுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி வெளியிட்ட அந்த வரைபடத்தில், உலக அளவில் கரோனா வைரஸ் பரவல் குறித்து மார்ச் முதல் ஜூலை வரையிலான காலக்கோடு குறிக்கப்பட்டுள்ளது. அதில் நியூஸிலாந்து, தென் கொரியா நாடுகள் தங்கள் நாட்டில் கரோனா பாதிப்பு இருந்தாலும், அதைக் கட்டுப்படுத்தி கரோனா பாதிப்பை குறைத்து வளைகோட்டைச் சாய்த்துவிட்டன.
ஆனால், அமெரிக்கா, இந்தியாவில் மட்டும் நாள்தோறும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வளைகோடு மேல்நோக்கி உயர்ந்து வருகிறது. இன்னும் வளைகோடு கீழ்நோக்கிச் சரியவில்லை. அதாவது பாதிப்பு குறையவில்லை என்பதைக் குறிப்பிடுகிறது. இதில் அமெரிக்காவின் வளைகோடு மேல்நோக்கியும் அடுத்த இடத்தில் இந்தியாவும் இருக்கிறது.
இந்த வரைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ராகுல் காந்தி, “கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா நல்ல நிலையில் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.