

9 ஆண்டுகளாக நடந்துவந்த பத்மநாபசுவாமி கோயில் வழக்கில், திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் கோயிலை நிர்வகிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.
இந்தியாவின் செல்வம் மிகுந்த கடவுள் என்று சொல்லப்படும் திருப்பதி வெங்கடாசலபதியையே மிஞ்சுமளவுக்கு, பாதாள அறைகளில் செல்வத்தைக் கொண்டிருக்கிறது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ஆலயத்தின் செல்வ வளம். பத்மநாபசுவாமி அனந்த சயன நிலையில் இருக்கும் இந்தக் கோயிலில், பி எனப்படும் பாதாள அறையைத் திறந்தால் உலகம் மிகப் பெரிய சிக்கலைச் சந்திக்கும் எனவும் நம்பிக்கை நிலவுகிறது. இந்நிலையில் கோயிலின் உரிமை தொடர்பாக நடந்த வழக்கில், உரிமையை திருவிதாங்கூர் மன்னர்கள் குடும்பத்திற்கு வழங்கித் தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
கோயிலின் அருகே வசித்து வரும் வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு பத்மநாபசுவாமி கோயிலில் ஆறு பாதாள அறைகள் இருப்பதாகவும், அதற்குள் விலைமதிப்பற்ற ஆவணங்கள் இருப்பதாகவும் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அந்த ஆறு அறைகளையும் திறந்து அதில் இருக்கும் பொருள்களை மதிப்பிடக் குழு அமைத்தது. இதில் 5 அறைகள் திறக்கப்பட்டன. கடந்த 2011-ம் ஆண்டு ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பில் தங்கம், வைரம், வெள்ளிப் பொருள்கள் கிடைத்தன. அவற்றின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். இதனிடையே பத்மநாபசுவாமி கோயிலை மாநில அரசே நிர்வகிக்கலாம் எனக் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மன்னர் குடும்பத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் லலித், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, பத்மநாபசுவாமி கோயிலின் மீது மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது. கோயில் சொத்துகளை மதிப்பிட மாவட்ட நீதிபதியின் கீழ் இடைக்காலக் குழு அமைக்கலாம். குழுவின் இடம் பெறுவோர் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். பொக்கிஷங்கள் உள்ள 6-வது அறையைத் திறப்பது தொடர்பாக நிர்வாகக் குழு முடிவு செய்யும்” என உத்தரவிட்டுள்ளது.
ஒன்பது ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு இன்று ஒரு முடிவை எட்டியிருந்தாலும், ஆறாவது அறையைத் திறந்தால் உலகம் மிகப்பெரிய அழிவைச் சந்திக்கும் என்றும் மன்னர் குடும்பத்திலும், பத்மநாபசுவாமி பக்தர்கள் வட்டத்திலும் நம்புகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஆலயத்தை நிர்வகிக்கும் உரிமையைப் பெற்றிருக்கும் மன்னர் குடும்பத்தினர், ஒருகாலத்தில் தங்களது ஆட்சி, அதிகாரம் அனைத்தையுமே பத்மநாபசுவாமியிடம் ஒப்படைத்தவர்கள். சேரமான் பெருமான் முதன் முதலில் இந்தக் கோயிலை எழுப்பினார். 900 வருடங்களுக்கு முன்பு இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டது. 1686-ல் தீக்கிரையான கோயிலை, 1729-ல் திருவிதாங்கூர் மன்னராக இருந்த மார்த்தாண்ட வர்மா புதுப்பித்தார். மார்த்தாண்ட வர்மா பத்மநாபசுவாமியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார்.
1750-ல் தனது அரசு, செல்வம், ஆளுகைக்குட்பட்ட பகுதி என அனைத்தையும் ஆலயத்தின் மூலவரான அனந்த பத்மநாபசுவாமிக்குப் பட்டயம் எழுதிக்கொடுத்து, தன் உடைவாளையும் அவர் முன்வைத்து சரணாகதி அடைந்தார் மார்த்தாண்ட வர்மா. அப்போது முதலே பத்மநாபசுவாமியின் மீது கொண்ட பற்றின் காரணமாக திருவிதாங்கூர் மன்னர்கள் பத்மநாபதாசர் என அழைக்கப்பட்டனர்.
கூடவே, இவர்களது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுக்கும் பத்மநாபசுவாமியே முதன்மை மன்னராக ஆனார். மன்னராட்சியில் பத்மநாபசுவாமியிடம் ஆட்சியையே கொடுத்த அரச வம்சத்தினர், மக்களாட்சியில் உச்ச நீதிமன்றம் வரை சென்று பத்மநாபசுவாமி கோயிலில் தங்களுக்கான உரிமையை நிலைநாட்டியுள்ளனர்.