

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் நிர்வகிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை மதிப்பதாகவும், அதை நடைமுறைப்படுத்துவோம் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயில் உலகப் புகழ்பெற்றதாகும். 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில் பாரம்பரியமாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன, நகைகளைப் பராமரிப்பதிலும், நிதி நிர்வாகத்திலும் ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டு கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எடுத்து திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் சார்பில் மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, யு.யு.லலித் ஆகியோர் அளித்த தீர்ப்பில், “திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கவும், சொத்துகளைப் பராமரிக்கவும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தாருக்கு உரிமை இருக்கிறது” என உத்தரவிட்டனர்.
இந்தத் தீர்ப்புக் குறித்து கேரள தேவஸ்தானவாரிய அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் அரச குடும்பத்தினருக்கு உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்; வரவேற்கிறோம்.
அந்தத் தீர்ப்பைக் கேரள அரசு நடைமுறைப்படுத்தும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுவதையும் தீர ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இன்னும் தீர்ப்பின் முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்புக் குறித்து திருவிதாங்கூர் அரச குடும்பத்தினரின் மூத்த உறுப்பினர் திருநாள் கவுரி பார்வரி பாயி கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரச குடும்பத்தாருக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பத்மநாபசுவாமியின் ஆசிர்வாதத்தின் காரணமாகவே இந்தத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின் வெற்றி அனைத்து பக்தர்களுக்கும் உரித்தானது. மனித சமூகம் நலமுடன், பாதுகாப்பாக இருக்க தொடர்ந்து பத்மநாப சுவாமியிடம் மன்னர் குடும்பம் பிரார்த்தனை செய்யும்.
கடினமான காலத்தில் மன்னர் குடும்பத்தினருடன் துணை நின்றவர்கள், ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அனைவரையும் பத்மநாபசுவாமி ஆசிர்வதிப்பார்” எனத் தெரிவித்தார்.