Last Updated : 13 Jul, 2020 08:58 AM

 

Published : 13 Jul 2020 08:58 AM
Last Updated : 13 Jul 2020 08:58 AM

பல்கலைக்கழகத் தேர்வு நடத்த 6 மாநிலங்கள் எதிர்ப்பு; யுஜிசி விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்-மனித வளத்துறை கருத்து: தேர்வுகள் குறித்து வாரத்தில் முடிவு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி


கரோனா வைரஸ் பரவும் காலத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்த தமிழகம், டெல்லி உள்பட 6 மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், யுஜிசி விதிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம், மாணவர்களின் கல்வி மதிப்பீடு அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அவசியம் என்று மத்திய மனிதவளத்துறை கருத்து தெரிவித்துள்ளது.

இதனால் பல்கலைக்கழக, கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுமா என்பது குறித்து இந்த வாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸ் பரவத்தொடங்கியதையடுத்து, மார்ச் மாதத்திலிருந்து நாட்டில் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. இதுவரை எந்த தேர்வுகளும் நடத்தப்படவில்லை. கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது முந்தைய மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஏனென்றால், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களை தேர்வு பெற்றதாக அறிவித்து, கரோனா காலத்தில் தேர்வுகளை நடத்தமுடியாமல் ரத்து செய்வதாக அறிவித்தன.

இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன் பிறப்பித்த உத்தரவில் பல்கலைக்கழக, கல்லூரி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் பல்கலைக்கழக மற்றும் கல்லூரிதேர்வுகள் நடத்தப்படும் என்று அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டது.

ஆனால், கரோனா வைரஸ் காலத்தில் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்துவது இயலாதது, தேர்வுகளை நடத்தும் முடிவை மாநில அரசுகளிடமே தர வேண்டும் எனக் கோரி மத்திய அரசுக்கு தமிழகம், டெல்லி, ஒடிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா,பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்கள் கடிதம் எழுதின. இதில் டெல்லி அரசு தேர்வுகள் ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பதாகவே அறிவித்துவிட்டது.

ஆனால், இதுவரை மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை.

இந்நிலையில் மனிதவளத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேர்வுகள் இப்போதே நடத்தப்பட வேண்டும், செப்டம்பர் இறுதிக்குள் தேர்வுகள் முடிவடைய வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறவில்லை.

தங்களுக்கு ஏற்றார்போல் உள்ளசூழலில் அட்டவணையை உருவாக்கி அதற்குள் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம். ஆன்-லைன் மூலமோ அல்லது மாணவர்கள் நேரடியாக வந்தோ தேர்வு எழுதலாம் அல்லது இருமுறையையும் பயன்படுத்தி தேர்வு எழுதலாம். ஆனால், தேர்வுகளை நடத்தாமல் விடுவது சாத்தியமானது. பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும்

எந்தக் கல்வி முறையிலும் மாணவர்களின் கல்வி ரீதியான மதிப்பீடு என்பது மிகவும் முக்கியம். தேர்வுகள் மாணவர்களின் செயல்பாடு அவர்களுக்கு தன்னம்பிக்கையையும், மனநிறைவையும் கொடுக்கும். தேர்வுகள் என்பது உலகளவில் போட்டியிடுதல், செயல்பாட்டுதிறன், நம்பகத்தன்மை ஆகியவற்றின் பிரதிபலிப்புதான்.

இந்த வாரத்தில் மத்திய மனதவளத்துறை அமைச்சகம் மாநிலங்களின் கல்வித்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளது. அப்போது, நாடுமுழுவதும் பல்கலைக்கழக, கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்தும், பட்டங்கள் வழங்குவது குறித்து உறுதி செய்யப்படும்.

யுஜிசி சட்டப்படி, யுஜிசி விதிமுறைகளுக்குக்கட்டுப்படுதல் கட்டாயம். இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுடன் திறந்த மனதுடன் கலந்தாய்வு செய்து, அவர்களின் பிரச்சினைகளை அறிந்து அதைத் தீர்க்க அமைச்சகம் தயாராக இருக்கிறது. மாணவர்களின் கல்விரீதியான நம்பிகத்தன்மையில் சமரசம் செய்ய முடியாது.

உலகளவில் முன்னணயில் இருக்கும் பல்கலைக்கழகங்களான பிரின்ஸ்டன், எம்ஐடி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், லண்டன் இம்பீரியல் காலேஜ், டொரான்டோ பல்கலைக்கழகம், மெக்மாஸ்டர், ஹீடல்பெர்க் பல்கலைக்கழகம், ஹாங்காங் பல்கலைக்கழகம் போன்றவை மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலமாவது தேர்வுகளை நடத்துகின்றன. ஆதலால் கல்வி நம்பகத்தன்மையில் சமரசம் செய்ய முடியாது”

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்

இதனால் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்ய மத்திய மனித வளத்துறை அமைச்சகம் தயாராக இல்லை. இருந்தபோதிலும், மாநில அரசுகளுடன் இந்த வாரத்தில் நடத்தும் ஆலோசனைக்குப்பின் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுமா என்பது முடிவாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x