

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் கோவிட்19 நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை உயர்வதைக் குறைக்க முடிகிறது. உயிர் காக்கும் கவசமாக நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் உதவுகிறது.
நோயாளிகளின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவது தெரியவந்தால் உடனடியாக எங்களை தொடர்புகொள்கின்றனர். உடனடியாக அவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் அனுப்பி வைக்கப்படுகிறது. அல்லது நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் நோய் பாதிப்புக்குள்ளான தனது நண்பருக்கு டெல்லி அரசு தக்க நேரத்தில் பல்ஸ் ஆக்ஸி மீட்டரை அனுப்பி உதவியதற்காக முதல்வர் கேஜ்ரிவாலுக்கு நன்றி தெரிவித்து ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் கேஜ்ரிவால் ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.