Published : 13 Jul 2020 06:45 AM
Last Updated : 13 Jul 2020 06:45 AM

லடாக் எல்லையில் கல்வான் உட்பட 4 பகுதிகளில் இருந்து முழுமையாக பின்வாங்கியது சீன ராணுவம்

லடாக் விவகாரத்தில் இந்தியா – சீனா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் விளைவாக, கல்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா,ஹாட் ஸ்பிரிங்ஸ், பாங்கோங் ஆகிய பகுதிகளில் இருந்து சீன ராணுவம் 600 மீட்டர் பின்வாங்கி உள்ளது. இந்தப் பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இமயமலையின் லடாக் பகுதியில் சீன ராணுவம் கடந்த மே மாதத் தொடக்கில் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய ராணுவ வீரர்கள் தடுக்க முற்பட்ட போது, இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, லடாக் எல்லையில் இந்தியாவும், சீனாவும் தங்கள் ராணுவத் துருப்புகளை அதிகப்படியாக நிறுத்தி வந்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

இதனிடையே, கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த பயங்கர மோதலில் இந்தியத் தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, இந்தியா – சீனா இடையே எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படும் சூழல் உருவானது.

இந்த அசாதாரண சூழலை தணிப்பதற்காக, இரு நாட்டு ராணுவக் கமாண்டர்கள் நிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. எனவே, இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மட்டத்தில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதன் விளைவாக, லடாக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கி வருகிறது. இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளில் தாங்கள் அமைத்ததற்காலிக கூடாரங்கள், கண்காணிப்பு கோபுரங்கள் ஆகியவற்றையும் அந்நாட்டு ராணுவத்தினர் அகற்றி வருகின்றனர். இதை இந்திய ராணுவ உயரதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நீண்டநாட்களாக தாங்கள் முகாமிட்டிருந்த கல்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், பாங்கோங் ஆகிய பகுதிகளில் இருந்தும் 600 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவத்தினர் நேற்று பின்வாங்கினர். இதையடுத்து, இந்திய ராணுவமும் அங்கிருந்து பின்வாங்கி உள்ளது. இரு நாட்டு வீரர்கள் இடையே தேவையில்லாத மோதலை தவிர்ப்பதற்காகவே இந்தப் பகுதிகளில் இருந்து இரு நாட்டு ராணுவமும் பின்வாங்கியிருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து கண்காணிப்பு

அதேபோல், இந்தப் பகுதிகளில் ராணுவ ரோந்துப் பணிகளையும்ரத்து செய்ய, இரு நாடுகளும் முடிவுசெய்துள்ளன. ஆனால், அவை பஃபர் ஸோன்கள் (கண்காணிப்பு இல்லாத பகுதிகள்) இல்லை எனவும் இந்தியா தெளிவுப்படுத்தி உள்ளது. இதன்மூலம் இந்தப் பகுதிகளை இந்தியா கண்காணிக்கும்.

லடாக்கின் பல பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியுள்ள போதிலும், பாங்கோங் ஏரி, டெஸ்பாங் சமவெளி ஆகிய பகுதிகளில் உள்ள சில இடங்களில் இருந்து அவை முழுமையாக வெளியேறவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அந்தப் பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்களும் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x