

“ஷீனா போரா கொலை வழக்கு குறித்து ஊடகங்கள் விசாரணை நடத்தி பரபரப்பு தகவல்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரி பாம்பே உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மும்பை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜூலியோ ரிபைரோ கடிதம் அனுப்பி உள்ளார்.
மும்பை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜூலியோ ரிபைரோ, பாம்பே உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மோகித் ஷாவுக்கு கடந்த 3-ம் தேதி ஒரு பக்க கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஷீனா போரா கொலை வழக்கு குறித்த விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது. ஆனால், ஊடகங்கள் தினம் தினம் தனிப்பட்ட முறையில் ‘விசாரணை’ நடத்தி பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இந்தப் பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட்டு, ஊடக விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். தேவைப்பட்டால், இந்தக் கடிதத்தையே மனுவாக எடுத்துக் கொண்டு பொதுநல வழக்காக தாங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஷீனா போரா கொலை குறித்து ஏதேதோ செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை அனுமதிக்க கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு ஜூலியோ ரிபைரோ கூறியுள்ளார்.