Last Updated : 12 Jul, 2020 03:47 PM

 

Published : 12 Jul 2020 03:47 PM
Last Updated : 12 Jul 2020 03:47 PM

தலைமை எப்போது விழிக்கப் போகிறது? காங்கிரஸை நினைத்து வருத்தப்படுகிறேன்: மனம் திறந்த கபில் சிபல்

ராஜஸ்தானில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பாஜக முயல்கிறது என்று முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். இதுகுறித்து முதல் முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ''எப்போது காங்கிரஸ் தலைமை விழித்துக்கொள்ளும்? காங்கிரஸை நினைத்து வருத்தமாக இருக்கிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டுள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு வைக்கக்கூடாது, குதிரை பேரம் நடத்தினோம் என்பதற்கு ஆதாரத்தைக் காட்டாவிட்டால் அரசியலில் இருந்து அசோக் கெலாட் விலகத் தயாரா என்று பாஜக பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் இன்று காலை முதல் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஜெய்ப்பூரில் உள்ள அவரின் வீட்டில் தனியாகச் சந்தித்து ஆலோசித்து வருகின்றனர்.

அதேபோல துணை முதல்வர் சச்சின் பைலட் இல்லத்தில் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என்று தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்க முயல்வது தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட் கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து, போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீஸாரின் சிறப்பு விசாரணைக் குழுவினர் துணை முதல்வர் சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி தங்கள் தரப்பு அறிக்கையைக் கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக சச்சின் பைலட்டுக்கு போலீஸார் அனுப்பிய நோட்டீஸ் அவருக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச அரசியலில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட நிலை ராஜஸ்தானிலும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் முதல் முறையாக தலைமை மீது அதிருப்தியுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “காங்கிரஸை நினைத்து வருத்தமாக இருக்கிறது. ராஜஸ்தானில் நடக்கும் குழப்பத்துக்கு விரைந்து தீர்வு காணுங்கள். எப்போது கட்சியின் தலைமை விழித்துக்கொள்ளப் போகிறது? லாடத்திலிருந்து குதிரைகள் அனைத்தும் தப்பி ஓடியபின்புதான் விழித்துக்கொள்ளப் போகிறோமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x