

கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் ஆட்சியில் பாரத மாதாவின் புனிதமான நிலம் சீனாவால் பறிக்கப்பட்டுள்ளது என்று விமர்சித்துள்ளார்.
கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் எல்லையில் இரு நாடுகளும் படைகளைக் குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இந்தப் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் 3 கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் இரு நாட்டு உயர் அதிகாரிகள் தரப்பிலும், தூதரக அளவிலும் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் எல்லைகளில் இருந்து இரு நாட்டு ராணுவமும் திரும்பிச் செல்வதற்கு ஒப்புக்கொண்டன. இதன்படி சீன ராணுவம், எல்லையில் உள்ள கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதியில் இருந்து முழுமையாகச் சென்றுவிட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 8 வாரங்களாக நீடித்த பதற்றம் பெரும்பாலும் குறைந்தது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நேற்று பதிவிட்ட ட்விட்டர் கருத்தில், “எல்லையில் நடந்த சீனத் தாக்குதல்கள், ஆக்கிரமிப்பு, ஊடுருவல் குறித்து சுயமான அமைப்பின் மூலம் உண்மைகளைக் கண்டறிய உத்தரவிட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
இதே கருத்தை ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற 144 அதிகாரிகளும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி இன்று ட்விட்டரில், நாளேடு ஒன்றில் வெளியான கட்டுரையைப் பதிவிட்டுள்ளார். எல்லையில் சீன-இந்திய ராணுவ வீரர்கள் மோதல் விவகாரத்தில் ஊடகங்களை மத்திய அரசு தவறாக வழிநடத்திவிட்டதாக ஓய்வுபெற்ற ராணுவத்தினர் சிலர் கூறியதாகவும், எல்லையில் நடந்த மோதல், இந்தியாவுக்குப் பின்னடைவு என்று அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி கூறுகையில், “பிரதமர் மோடியின் ஆட்சியில் என்ன நடந்திருக்கிறது? பாரத மாதாவின் புனிதமான நிலம் சீனாவால் பறிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், பிஎம் கேர்ஸ் நிதி குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்வதை பாஜக தடுத்துவிட்டது என்ற செய்திக் கட்டுரையை ராகுல் காந்தி இணைத்துள்ளார்.
அதில் அவர் பதிவிட்ட கருத்தில், “பிஎம் கேர்ஸ் நிதிக்கு யாரெல்லாம் நன்கொடை அளித்தார்கள் என்பதை வெளியிடுவதற்கு பிரதமர் மோடி ஏன் அச்சப்படுகிறார். சீன நிறுவனங்களான ஹூவோய், ஜியோமி, டிக் டாக், ஒன் பிளஸ் நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ளன என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். ஏன் விவரங்களைப் பகிரவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.