

கடந்த மாதம் காஷ்மீருக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஆளில்லா விமானத்தை நமது ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதில் ஆயுதங்கள் இருந்ததும், அவற்றை காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளுக்கு வழங்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதே பாணியில், சீனாவின் வர்த்தக ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பின் (ஐஎஸ்ஐ) ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் காஷ்மீர் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், நவ்காம் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள வேலியை துண்டித்துவிட்டு இந்திய பகுதிக்குள் 2 பேர் ஊடுருவினர். 100 மீட்டர் தூரம் முன்னேறி வந்த அவர்களை பாதுகாப்புப் படையினர் பார்த்துவிட்டனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இவர்கள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கி, நூற்றுக்கணக்கான தோட்டாக்கள், சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஆஸ்திரிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பாகிஸ்தானில் தயாரான 4 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் உள்ள தொடர்புக்கான முக்கிய ஆதாரமாகும் என காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.