கெலாட்டுக்கு பெரும்பான்மை இருந்தால் எப்படி அரசை எப்படி கவிழ்க்க முடியும்: பாஜக கேள்வி

கெலாட்டுக்கு பெரும்பான்மை இருந்தால் எப்படி அரசை எப்படி கவிழ்க்க முடியும்: பாஜக கேள்வி
Updated on
1 min read

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு போதிய பெரும்பான்மை இருந்தால் எப்படி அரசை கவிழ்க்க முடியும் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும்விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

மேலும், மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. எனினும் மாநிலங்களவைத் தேர்தல் பிரச்சினை இன்றி நடந்து முடிந்தது. இந்தநிலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயலுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது:

‘‘கரோனா வைரஸுக்கு எதிராக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த கொடி பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முயலுகிறோம். ஆனால் ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்க்க பாஜக முயலுகிறது. இது வாஜ்பாய் ஆட்சிக்காலம் போல அல்ல. 2014-ம் ஆண்டுக்கு பிறகு பாஜக மிக மோசமாக மாறி விட்டது.

மதத்தை பயன்படுத்தி பெருமையையும், பிரிவுகளை உருவாக்க முயலுகிறார்கள். ராஜஸ்தான் அரசை கவிழக்க பாஜக பணம் வழங்குகிறது’’ எனக் கூறினார். இதனை பாஜக மறுத்துள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா கூறுகையில் ‘‘ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குயுக்தி கொண்ட அரசியல்வாதி. ஆட்சி செய்யும் திறமை இல்லாதவர். இதனால் பாஜக ஆட்சியை கவிழ்க்க முனைவதாக தொடர்ந்து புகார் கூறி வருகிறார். அசோக் கெலாட் அரசுக்கு போதிய பெரும்பான்மை இருந்தால் எப்படி அரசை கவிழ்க்க முடியும். அவரது குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in