

விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளி ராம்விலாஸ் திரிவேதி என்பவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கான்பூர் அருகில் உள்ள பிக்ருஎன்ற கிராமத்துக்கு கடந்த 2-ம் தேதி ரவுடி விகாஸ் துபேவை போலீஸார் பிடிக்கச் சென்றனப். அப்போது, அவரது ஆட்களால் டிஎஸ்பி, 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ரவுடி விகாஸ் துபே கும்பலைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது
இந்த வழக்கில் ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளிகள் அக்னி ஹோத்ரி, பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே, விகாஸ் துபே உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், விகாஸ் துபேயின் முக்கிய உதவியாளர் அமர் துபே, பிரபாத் மிஸ்ரா ஆகியோரும் போலீஸார் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விகாஸ் துபே, மத்தியப்பிரதேசம் உஜ்ஜைனி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
உ.பி. போலீஸார் விகாஸ் துபேயை விசாரணைக்காக கான்பூருக்கு அழைத்து வந்தனர். அப்போது கடும்மழையால் துபே வந்த கார் கவிழ்ந்தபோது, அதிலிருந்து தப்பிக்க விகாஸ் துபே முயன்றார். அப்போது போலீஸார் சுட்டதிில் விகாஸ் துபே கொல்லப்பட்டார். கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காவல் ஆய்வாளர் உள்பட 4 போலீஸார் காயமடைந்தனர்.
இந்தநிலையில் விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளியான அரவிந்த் என்ற குட்டன் ராம்விலாஸ் திரிவேதி என்பவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புபடை போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். அவரது வாகன ஓட்டுநர் சோனு திவாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் தானேயில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ராம் விலாஸ் திரிவேதிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திரிவேதியை உ.பி. போலீஸார் தேடி வந்தனர்.