Last Updated : 11 Jul, 2020 03:06 PM

 

Published : 11 Jul 2020 03:06 PM
Last Updated : 11 Jul 2020 03:06 PM

கரோனா வைரஸால் அனைத்துப் பல்கலைக்கழகத் தேர்வுகளும் ரத்து: டெல்லி அரசு முடிவு

கரோனா வைரஸ் பரவல் காரணமாக டெல்லி அரசுக்கு உட்பட்ட அனைத்துப் பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகளும், இறுதியாண்டுத் தேர்வுகளும் ரத்து செய்ய டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக மாநிலக் கல்வித்துறை அமைச்சரும், துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதையடுத்து, மார்ச் மாதத்திலிருந்து நாட்டில் அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. இதுவரை கல்லூரி அளவில் எந்தத் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள், தேர்வுகள் நடத்தப்படுமா அல்லது முந்தைய மதிப்பெண்கள் கணக்கில் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஏனென்றால், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்வு பெற்றதாக அறிவித்து, கரோனா காலத்தில் தேர்வுகளை நடத்தமுடியாமல் ரத்து செய்வதாக அறிவித்தன.

இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன் பிறப்பித்த உத்தரவில் பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் மாதம் பல்கலைக்கழக மற்றும் கல்லூரித் தேர்வுகள் நடத்தப்படும் என்று அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டது.

இதனால் கரோனா காலத்தில் தேர்வுகளைப் பாதுகாப்புடன் நடத்த முடியுமா, மாணவர்கள் தேர்வு எழுத முடியுமா என்ற கேள்வி எழுந்தது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், பல்கலைக்கழகத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், கரோனா பரவும் நேரத்தில் தேர்வு நடத்துவது நியாயமற்றது என்று வலியுறுத்தியிருந்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், இன்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதிய கடிதத்தில், கல்லூரித் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்த முடியாத சூழல் இருப்பதால், தேர்வுகளை நடத்தும் முடிவுகளை மாநில அரசுக்கே அளிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா : படம் | ஏஎன்ஐ.

இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்தும் சூழல் இல்லை. ஆதலால், டெல்லி அரசுக்கு உட்பட்ட பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள், இறுதியாண்டுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மாநில அரசின் கீழ் வரும் அனைத்துப் பல்கலைக்கழகங்களும், மாணவர்களின் முந்தைய தேர்ச்சி வீதத்தின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்கி அவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். இதே முறைதான் இறுதியாண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பொருந்தும். எதிர்பாராத சூழலில் எதிர்பாராத முடிவுகளைத்தான் எடுக்க வேண்டும்.

பள்ளிகளைப் பொறுத்தவரை தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடத்தப்படாது. அவர்களின் முந்தைய மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி கணக்கில் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பின்பற்றியே டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசை டெல்லி அரசு கேட்டுக்கொண்டது. அதன்படியே இறுதியாக நடந்தது.

இப்போது பள்ளிக்கூடப் பிரச்சினை தீர்க்கப்பட்டு, பல்கலைக்கழகத் தேர்வுகள் வந்துள்ளன. இந்த செமஸ்டர் முழுவதும் எந்தவிதமான களப்பணி, செய்முறைத் தேர்வு, ஆய்வகச் சோதனை நடத்தப்படாது.

டெல்லியைச் சேர்ந்த இறுதியாண்டு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தேர்வுக்காகக் காத்திருக்காமல் வேலை கிடைத்திருந்தால் அல்லது வேலைவாய்பபு கிடைத்திருந்தால் அதைப் பயன்படுத்தி, பணியைத் தொடரலாம்’’.

இவ்வாறு மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x