

அருணாச்சலப் பிரதேச மாநிலம், கோன்ஸா பகுதிக்குள் நுழைய முயன்ற என்எஸ்சிஎன் (ஐஎம்) கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தி நேஷனல் சோசலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலிம் (ஐசக்-முவிவா) எனும் என்எஸ்சிஎன் (ஐஎம்) கிளர்ச்சியாளர்கள் நாகாலாந்து மக்களுக்காக தனியாக நாடு கேட்டு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதமேந்திப் போராடி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 60 ஆண்டுகளாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் அவ்வப்போது அருணாச்சலப் பிரதேச பகுதிக்குள் நுழைந்து வன்முறைச் செயல்களில் இந்தக் கிளர்ச்சியாளர்கள் ஈடுபடுவார்கள். இதனால் பாதுகாப்புப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும்.
இந்நிலையில் திராப் மாவட்டத்தில் தின்சுகா நகரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள கோன்ஸா பகுதியில் இன்று அதிகாலை என்எஸ்சிஎன் (ஐஎம்) கிளர்ச்சியாளர்கள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அசாம் ரைபிள் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து அசாம் ரைஃபிள் படை தரப்பில் கூறுகையில், “கோன்ஸா பகுதியில் என்எஸ்சிஎன் (ஐஎம்) கிளர்ச்சியாளர்கள் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஊடுருவ முயல்கிறார்கள் என்று ரகசியத் தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பைத் தீவிரப்படுத்தினோம்.
அப்போது ஊடுருவ முயன்ற கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அசாம் ரைபிள் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டது.