Last Updated : 11 Jul, 2020 12:13 PM

 

Published : 11 Jul 2020 12:13 PM
Last Updated : 11 Jul 2020 12:13 PM

எளிதாக நினைக்கீதார்கள்; அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள்; இந்திரா காந்தி, வாஜ்பாய் கூட தோற்றுள்ளனர்: சரத் பவார் எச்சரிக்கை

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் : கோப்புப்படம்

மும்பை

அரசியல்வாதிகளைவிட வாக்காளர்கள் வலிமையானவர்கள். இந்திரா காந்தி, வாஜ்பாய் போன்றவர்கள்கூட தோல்வி அடைந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் வாக்காளர்களை எளிதாக எடைபோடக்கூடாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் நான் திரும்பி வருவேன் என்று கூறியதற்குப் பதிலடியாக சரத் பவார் இதைத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான சரத் பவார் நேர்காணல் அளித்துள்ளார். இதுவரை 'சாம்னா'வில், பால்தாக்ரே, உத்தவ் தாக்ரே இருவர் நேர்காணல் மட்டுமே வந்துள்ள நிலையில் முதல் முறையாக சரத்பவார் நேர்காணல் வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஆளும் மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் முக்கியமான அங்கமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ஜனநாயகத்தில், நாம் எப்போதுமே முடிவில்லாமல் பதவியில் இருப்போம் என நினைக்க முடியாது. நீங்கள் வாக்காளர்களைத் துச்சமாக மதித்தால், வாக்களார்கள் தாங்கிக்கொள்ளமாட்டார்கள்.
சக்திவாய்ந்த, புகழ்பெற்ற தலைவர்களான இந்திரா காந்தி, அடல்பிஹாரி வாஜ்பாய் கூட தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அர்த்தம், ஜனநாயக உரிமை அதாவது, அரசியல்வாதிகளைவிட சாமானிய மனிதர்கள் புத்திசாலிகள்.

அரசியல்வாதிகள் தனக்கிருக்கும் எல்லையை மீறிச் சென்றால், அவர்களுக்கு வாக்காளர்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள். ஆதலால், மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நிலைப்பாட்டில் சிலர் சிந்திக்கக்கூடாது.

எந்த வாக்காளர்களையும் நாம் எளிதாக எடைபோடக்கூடாது. நாம் மீண்டும் ஆட்சிக்கு வருவோம், ஆட்சியில் இருப்போம் என்ற நிலைப்பாட்டில் இருக்கக் கூடாது. இது ஒருவகையான அகங்காரம். இது வளரும்பட்சத்தில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.

மகாராஷ்டிராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது ஏதோ விபத்து அல்ல. தேசிய மனநிலையை மனதில் வைத்து நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரா மக்கள் வாக்களித்தார்கள்.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்களின் மனநிலை மாறிவிட்டது. மக்களவைத் தேர்தலில் பாஜக நன்கு செயல்பட்டபோதிலும், பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சியால் சிறப்பாக வெல்ல முடியவில்லை. மகாராஷ்டிரா மக்கள்கூட ஆட்சி மாற்றத்துக்காகவே வாக்களித்தார்கள்.

முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் மாநிலத்தில் லாக்டவுன் கொண்டுவந்ததில், உங்களுக்கு அவருடன் மனக்கசப்பு இருப்பதாகக் கூறப்படுகிறதே?

அது நிச்சயம் உண்மையில்லை. எங்கள் இருவருக்கும் என்ன கருத்து வேறுபாடு இருக்கிறது. லாக்டவுன் காலம் முழுவதும் முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் நான் தொடர்பில்தான் இருந்தேன். ஆளும் 3 கட்சிகளுக்கு இடையே வேறுபாடு இருப்பதாகச் செய்திகள் வெளியாவதை நானும் படித்தேன். ஆனால், அதில் சிறிதும் உண்மையில்லை.

பால் தாக்கரே அதிகாரத்தின் இருக்கையில் அமரவில்லை. ஆனால், பின்னால் இருந்து ஆட்சியை இயக்கினார். அவரின் சித்தாந்தத்தால் மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தார். ஆனால், இன்றைய அரசு சிந்தாந்தத்தால் உண்டானது அல்ல. அதிகாரத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு உத்தவ் தாக்கரேவிடம் இருக்கிறது.

இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x