Published : 11 Jul 2020 08:14 AM
Last Updated : 11 Jul 2020 08:14 AM

30 ஆண்டுகளில் 5 கொலை உட்பட 62 வழக்குகள்: உ.பி.யில் சட்டவிரோத ராஜாங்கம் நடத்திய ரவுடி விகாஸ் துபே

கடந்த 30 ஆண்டுகளில் 5 கொலை உட்பட 62 வழக்குகள் ரவுடி விகாஸ் துபே மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் பிரபல ரவுடி விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீஸாரை சுட்டுக் கொன்ற சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய செய்தது. கொலை, கொலை முயற்சி, ஆட் கடத்தல் உள்ளிட்ட 62 குற்ற வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் துபே, மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நேற்றுமுன்தினம் சிக்கினார். உ.பி. போலீஸாரிடம் ஒப்படைத்த பின்னர் தப்பிக்க முயன்ற நிலையில் போலீஸாரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த 30 ஆண்டுகளில் அவர் மீது 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2001-ம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள ஷிவ்லி போலீஸ் நிலையத்துக்கு உள்ளேயே பாஜக தலைவர் சந்தோஷ்சுக்லாவை விரட்டிச் சென்று சுட்டுக் கொன்றார். வழக்கில் இருந்து 4 வருடங்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னதாக 1999-ல் துபே, தனது சொந்த கிராமத்தில் ஜுன்னா பாபா என்பவரை கொலை செய்து அவரது வீடு, நிலம், சொத்துகளை அபகரித்துக் கொண்டார்.

கடந்த 2000-ம் ஆண்டில் தனது ஆசிரியர், தாராசந்த் பள்ளியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முதல்வர் ஆகியோரை கொலை செய்தார். கடந்த 2002-ம் ஆண்டு பஞ்சாயத்து தலைவரான லல்லன் பாஜ்பாயாவை கொலை செய்ய விகாஸ் துபே முயற்சித்தார். அதே ஆண்டில் ரூ.20ஆயிரத்துக்காக கேபிள் ஆபரேட்டர் தினேஷ் துபே என்பவரை கொலை செய்துள்ளார்.

அரசியலில் குதித்தார்

கடந்த 2006-ம் ஆண்டு இவர் அரசியலில் குதித்தார். பிக்ரு கிராம பஞ்சாயத்து தலைவரானார். இதைத் தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே பிக்ரு கிராமத்துக்கு அருகிலுள்ள பீட்டி கிராமத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விகாஸ் துபேவின் சகோதரர் கிராம பஞ்சாயத்து தலைவராக போட்டியின்றி தேர்வானதற்கு காரணமாக அமைந்தார். இவரது சகோதரரின் மனைவி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவை அனைத்தும் விகாஸ் துபேவின் செல்வாக்கால்தான்.கடந்த 30 ஆண்டுகளாக உத்தர பிரதேச மாநில போலீஸாரை ஏமாற்றி வந்துள்ளார் விகாஸ். இவர் மீது உ.பி. ரவுடிகள் சட்டம், குண்டர்கள் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன.

கடந்த 1990-ல் இவர் மீது ஷிவ்லி போலீஸ் நிலையத்தில் முதல் வழக்குப் பதிவானது. ஒருவரை அடித்த குற்றத்துக்காக இந்த வழக்குப் பதிவானது. 1992-ல் இவர் மீது முதல் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர் சித்தேஸ்வர் பாண்டே, கொலை வழக்கில் இவர் மீது வழக்குப் பதிவானது. இவர் உட்பட 4 பேருக்கு அந்த வழக்கில் 2004-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் ஒருவர் இறந்துவிட்டார். விகாஸ் துபே உள்பட்ட 3 பேர் ஜாமீனில் வெளியே இருந்தனர். ரவுடியாக இருந்த போதிலும் பல போலீஸ் அதிகாரிகள் இவருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். கடந்த 1990-ல் தொடங்கிய விகாஸ் துபேவின் ரவுடி சாம்ராஜ்ஜியம், 2020-ம் ஆண்டில் முடிவுக்கு வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x